தேடுதல்

Vatican News
திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் 

குற்றவியல் நீதி என்பது, தண்டனையோடு நின்றுவிடுவதில்லை

சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த வேண்டியது மனித குலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு இன்றியமையாதது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், குற்றங்களைத் தடுப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதிலும், குற்றவியல் நீதியைக் கட்டிக் காப்பதிலும், அனைத்து நாடுகளும் கவனம் செலுத்தவேண்டும் என, திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது.

ஜப்பான் நாட்டின் Kyoto நகரில் ஐ.நா. நிறுவனத்தின் குற்றத்தடுப்பு, மற்றும், குற்றவியல் நீதி அமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த வேண்டியது, மனித குலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று கூறினார்.

குற்றத்திற்கு தண்டனை வழங்கினால் மடடும் போதாது, மாறாக, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவதையும், குற்றங்கள் தடுக்கப்படுவதையும், குற்றவியல் நீதி காக்கப்படுவதையும் உறுதி செய்யவேண்டியது அவசியம் என்று கூறினார், பேராயர்.

குற்றத்தடுப்பு, மற்றும் குற்றவியல் நீதி குறித்து ஜப்பானின் Kyoto நகரில் இம்மாதம் 7 முதல் 12 வரை இடம்பெற்றுவரும், 14வது கருத்தரங்கில் திருப்பீடத்தின் சார்பில் உரையார்றிய பேராயர் காலகர் அவர்கள், குற்ற நடவடிக்கைகளைத் தடுப்பதும், குற்றச் செயல்களுக்கு சரியான முறையில் பதிலளிப்பதும், அனைத்துலக மனித உரிமைகளை மதிப்பது, மற்றும் பாதுகாப்பதோடு நெருங்கிய தொடர்புடையது என்று கூறினார்.

பொருளாதார, மற்றும், சமுதாய சரிநிகரற்ற நிலைகள், ஊழல்கள் போன்றவைகளால் பலம்பெறும் குற்றங்கள், பலவீன சமுதாயத்தைச் சார்ந்தவர்களையே அதிகம் பழிவாங்குகின்றன எனவும் எடுத்துரைத்தார் திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர், பேராயர் காலகர்.

குற்றமிழைத்தோருக்கு தண்டனை வழங்குவதோடு விட்டுவிடாமல், அதையும் தாண்டிச் சென்று, அவரை திருத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதை மீண்டும் இக்கருத்தரங்கில் நினைவூட்டினார், பேராயர் காலகர்.

இன்றைய பெருந்தொற்று காலத்தில் சரிநிகரற்ற நிலைகளும், குற்றங்களும் அதிகரித்துள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார் பேராயர் காலகர்.

ஐந்தாண்டிற்கு ஒருமுறை 'குற்றங்கள் தடுப்பு, மற்றும் குற்றவியல் நீதி' குறித்து ஐ.நா.வால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறவேண்டியிருந்தது, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போடப்பட்டு, தற்போது ஜப்பானில் இடம்பெற்று வருகிறது.

09 March 2021, 14:32