தேடுதல்

திருத்தந்தையுடன் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் திருத்தந்தையுடன் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் 

மனித உரிமைகளை பாதுகாப்பது குறித்த அர்ப்பணம்

மனித உரிமைகள் அங்கீகரிக்கப்படுவது, மதிக்கப்படுவது, பாதுகாக்கப்படுவது, மற்றும் மேம்படுத்தப்படுவது ஆகியவை இன்னும் தூரமானதாகவே இருக்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உலகின் பொருளாதார, சமுதாய, மற்றும் நல அமைப்பு முறைகளில் பாதிப்புக்களைக் கொண்டுள்ள கோவிட்-19 பெருந்தொற்று, மனித உரிமைகளை பாதுகாப்பது குறித்த அர்ப்பணத்திலும் தன் பாதிப்புக்களைக் கொண்டுள்ளது பற்றி, ஐ.நா. நிறுவனத்தின், மனித உரிமைகள் அவைக்கு அனுப்பிய தன் காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருப்பீட உயர் அதிகாரி, பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

இக்காணொளிச் செய்தியை பிப்ரவரி 23, செவ்வாய்க்கிழமையன்று அனுப்பியுள்ள, திருப்பீட வெளியுறவுத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், மனித உரிமைகளின் ஆதாரத்தை மீண்டும் கண்டுணர்ந்து, அவைகளை நம்பகத்தகுந்த வகையில் செயல்படுத்துவது பற்றிய வழிகளை கண்டுகொள்ள வேண்டியது அவசியம் என அதில் தெரிவித்துள்ளார்.

அனைவரின் மனித உரிமைகளும், மாண்பும் மதிக்கப்படுவதன் வழியாகவே உலகில் சுதந்திரம், நீதி, மற்றும் அமைதியை கட்டிக்காக்க முடியும் என தன் செய்தியில் கூறியுள்ள பேராயர் காலகர் அவர்கள், மனித உரிமைகள் அங்கீகரிக்கப்படுவது, மதிக்கப்படுவது, பாதுகாக்கப்படுவது, மற்றும் மேம்படுத்தப்படுவது ஆகியவை இன்னும் தூரமானதாகவே இருக்கின்றன எனவும் கவலையை வெளியிட்டுள்ளார்.

வாழ்வதற்கான உரிமை என்பது, பல வேளைகளில், சித்ரவதை நடவடிக்கைகள், மக்களை காணாமல் போகவைத்தல், மரணதண்டனை போன்றவைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ள சூழல்கள் குறித்தும் தன் செய்தியில் கூறும் பேராயர் காலகர் அவர்கள், முதியோர், புலம்பெயர்ந்தோர், குழந்தைகள், மற்றும் தாய்மையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய மனித சமுதாயத்தின் கடமைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறக்கவிருக்கும் குழந்தைகளை தாயின் வயிற்றிலேயே அழிப்பது, தற்கொலைகளுக்கு சட்ட ரீதியாக உதவுதல் போன்றவைகளும், மனித வாழ்வையும் மாண்பையும் எதிர்க்கும் செய்லபாடுகள் எனவும் கூறியுள்ளார் பேராயர் காலகர்.

இந்த கோவிட் காலத்தில் பல அரசுகள் கொணர்ந்துள்ள கட்டுப்பாடுகளாலும் சிலரின் மனித உரிமைகள் பாதிப்பை சந்திக்கின்றன, என கூறும் பேராயர் காலகர் அவர்கள், முதியோர், புலம்பெயர்ந்தோர், பழங்குடியினத்தவர், சொந்த நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோர், குழந்தைகள் போனறோர், இன்றைய உலகில், தேவைக்கு அதிகமான முறையில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் மதிக்கப்படுதல் எனும்போது, அது சுதந்திர சிந்தனைக்குரிய உரிமை, மனச்சான்றிற்குரிய உரிமை, மற்றும் மதம் தொடர்புடைய உரிமைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் காலகர்.

ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்குரிய உரிமைகள் உறுதிச் செய்யப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தும் திருப்பீட வெளியுறவுத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், நம்மைப் பிரிப்பவைகளைத் தாண்டிச் சென்று, உடன்பிறந்த உணர்வுடன் அனைவரும் வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2021, 14:57