தேடுதல்

Vatican News
கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள்   கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள்   (ANSA)

கோவிட்-19 காலத்தில், பூமிக்கோளத்தைப் பராமரிக்க அக்கறை

உலகில் எல்லா இடங்களிலும், கோவிட்-19ஆல் உருவாகியுள்ள மனச்சோர்வை அகற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் - பேராயர் காலகர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், மக்களுக்காக, மக்களையும், பூமிக்கோளத்தையும் பராமரித்தல்" என்ற தலைப்பில், வத்திக்கானின் கோவிட்-19 அமைப்பு, திருப்பீடத்திற்கென பணியாற்றும், பல்வேறு நாடுகளின் அரசியல் தூதர்களுக்கு, பிப்ரவரி 19, இவ்வெள்ளியன்று இணையம்வழி கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய, பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், உலகில் எல்லா இடங்களிலும் நிலவும் மனச்சோர்வை அகற்றுவதற்கு, நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இந்தப் பணியிலிருந்து நாம் ஒதுங்கிக்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள, “அனைவரும் உடன்பிறந்தோர்” (Fratelli Tutti, 3,அக். 2020) மற்றும்,  “இறைவா உமக்கே புகழ்” (Laudato si' 24,மே, 2015) ஆகிய இரு திருமடல்களின் ஒளியில், பெருந்தொற்று முடிவுற்றபின், நல்லதொரு வருங்காலத்தை அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் பற்றி சிந்திக்கவேண்டும் என்பது, இக்கூட்டத்தில் சிறப்பாக வலியுறுத்தப்பட்டது.

உலகளாவிய நெருக்கடி, உலகளாவிய முயற்சிக்கு

தனியாள்களைப் பொருத்தவரை, அவர்கள், தங்களின் உடல், மனம், மற்றும், ஆன்மீகக் காரியங்களில் அக்கறை எடுக்கவேண்டும் என்பதையும், மக்களைப் பொருத்தவரை, கலாச்சார, அரசியல், மற்றும், சமுதாயம், ஆகிய நிலைகளில், கவனம் செலுத்தவேண்டும் என்பதையும், கோவிட்-19 பெருந்தொற்று, மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது என்று இக்கூட்டத்தில் கூறப்பட்டது.

இப்பூமிக்கோளத்திற்கு, பல்வேறு நிலைகளில் கவனம் செலுத்தப்படவேண்டிய தேவை உருவாகியுள்ளதையும், கோவிட்-19 வெளிப்படுத்தியுள்ளது என்றும் இக்கூட்டத்தில் கூறப்பட்டது.

இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்த, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், வத்திக்கானின் கோவிட்-19 அமைப்பு, ஐந்து குழுக்களாக ஆற்றிவரும் பணிகளை விளக்கியதோடு, கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள, உலகளாவிய நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு, உலகளாவிய முயற்சி தேவைப்படுகின்றது என்று எடுத்துரைத்தார்.

கோவிட்-19 தடுப்பூசிகள்

ஒவ்வொருவரும், நம்பிக்கையின் மீட்பளிக்கும் சக்தியோடு, தனக்கு அடுத்திருப்பவரின் நலனில் அக்கறை கொள்வது, வருங்காலத்தைக் குணப்படுத்த நமக்கு உதவும் என்பதை வலியுறுத்திய கர்தினால் டர்க்சன் அவர்கள், கோவிட்-19 தொடர்புடைய சிகிச்சைகள், மற்றும், தடுப்பூசிகள் வழங்கப்படுவதில், எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

தடுப்பூசிகள் வழங்கப்படுவதில், நீதி மற்றும், தோழமையுணர்வை உள்ளடக்கிய கொள்கைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று, இந்த மெய்நிகர் கூட்டத்தில் பங்குபெற்ற, மற்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை உருவாக்கிய, கோவிட்-19 திருப்பீட அமைப்பு, இந்த இணையவழி கூட்டத்தை நடத்தியது.

இதற்கிடையே, உலகில், கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், உலக அளவில் 281 டிரில்லியன் டாலர்கள் கடனை உருவாக்கியுள்ளது என்று கூறப்படுகின்றது.

20 February 2021, 14:57