தேடுதல்

Vatican News
120221ல் வத்திக்கான் வானொலியின் வயது 90 120221ல் வத்திக்கான் வானொலியின் வயது 90 

வத்திக்கான் வானொலியில் புதிய இணையதளம், வெப் வானொலி

தமிழ், மலையாளம், இந்தி உட்பட, 41 மொழிகளில் ஒலிபரப்பை நடத்திவரும் வத்திக்கான் வானொலியில், 69 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் வானொலி தொடங்கப்பட்டதன் தொண்ணூறாவது ஆண்டு நினைவாக, அவ்வானொலியில், புதிய இணையதளம் ஒன்றும், வெப் வானொலி ஒன்றும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வத்திக்கான் வானொலியின் தொண்ணூறாவது ஆண்டு நிறைவான, பிப்ரவரி 12, வருகிற வெள்ளியன்று, இத்தாலியம், பிரெஞ்ச், ஆங்கிலம், இஸ்பானியம், போர்த்துக்கீசியம், ஜெர்மானியம், அர்மேனியம் ஆகிய மொழிகளில் வெப் வானொலி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதில், ஆண்டு முழுவதும் ஏறத்தாழ முப்பது நேரடி ஒலிபரப்புகள் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளன என்றும், இவற்றை வத்திக்கான் வானொலியின் இணையதளத்தில் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித சமுதாயம் முழுவதும், கோவிட்-19 பெருந்தொற்றால் மிகப்பெரும் துன்பங்களை அனுபவித்துவரும் இவ்வேளையில் நாம் 90ம் ஆண்டை சிறப்பிக்கின்றோம் என்று கூறியுள்ள, வத்திக்கான் வானொலியின் நிர்வாக பதிப்பாசிரியர் (Managing-editor) Massimiliano Menichetti அவர்கள், நற்செய்தியின் ஒளியில் நிகழ்வுகளை விளக்குவதிலும், திருத்தந்தையின் குரலாகச் செயல்படுவதிலும், கிறிஸ்தவ நம்பிக்கையை அறிவிப்பதிலும், யாரையும் ஒதுக்கிவிடாமல் எப்போதும் நாம் பணியாற்றவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த பெருந்தொற்று காலம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமக்குச் சவாலாக உள்ளது என்றும், வானொலிப் பணியாளர்கள், பல்வேறு மொழிகளில், தொலைக்காட்சி மற்றும், வானொலியில், நேரடி வருணனைகளை வழங்குவதோடு, புதிய நிகழ்ச்சிகளை உருவாக்குகின்றனர், மேலும், உலகின் கடையெல்லைகளில் வாழ்வோரையும் நற்செய்தி சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில், podcast, ஒலிவடிவில் நூல்கள் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும், மெனிகெத்தி அவர்கள் கூறியுள்ளார். 

நற்செய்தியின் நம்பிக்கை மற்றும், திருத்தந்தையின் குரல், உலகமனைத்திற்கும் எடுத்துச்செல்லப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் விருப்பத்திற்கிணங்கி, வானொலியைக் கண்டுபிடித்த குலியெல்மோ (வில்லியம்) மார்க்கோனி (Guglielmo Marconi) அவர்கள், தொன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வத்திக்கான் வானொலியை வடிவமைத்தார்.

வத்திக்கான் வானொலியின் பிறப்பு

1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதியன்று ஆரம்பிக்கப்பட்ட வத்திக்கான் வானொலி, படிப்படியாக வளர்ந்து, இன்று, விண்கோள், DAB+, டிஜிட்டல், இணையதளம், மற்றும், ஹெர்ட்ஸ் அலைவரிசைகள் வழியாகவும், உலகின் கடையெல்லைகளுக்கும் நற்செய்தி அறிவிக்கப்படவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆவலை நிறைவேற்றும்பொருட்டு, சிற்றலைகளிலும் தன் ஒலிபரப்பை நடத்தி வருகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத் தலைமையகத்தின் பல்வேறு துறைகளில் மேற்கொண்டுவரும் சீர்திருத்தங்களில் ஒன்றாக, திருப்பீடத்தில் இதுவரை செயல்பட்டுவந்த சமூகத்தொடர்பு அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சமூகத்தொடர்பு துறை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு (ஜூன்,27,2015) இயங்கிவரும் இக்காலக்கட்டத்தில், வத்திக்கான் வானொலி தன் தொண்ணூறாவது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கின்றது.

தமிழ், மலையாளம், இந்தி உட்பட, 41 மொழிகளில் ஒலிபரப்பை நடத்திவரும் வத்திக்கான் வானொலியில், 69 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர்.  

09 February 2021, 13:12