தேடுதல்

Vatican News
வத்திக்கான் அருங்காட்சியகம் வத்திக்கான் அருங்காட்சியகம்   (AFP or licensors)

வத்திக்கான் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

சமுதாய தூரத்தைக் கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு, பார்வையாளர்கள் வத்திக்கான் அருங்காட்சியகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த பல மாதங்களாக மூடிக்கிடந்த வத்திக்கான் அருங்காட்சியகம், பிப்ரவரி 1, இத்திங்கள் முதல் பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்று, இந்த அருங்காட்சியகத்தின் இயக்குனர் பார்பரா ஜத்தா (Barbara Jatta) அவர்கள் வத்திக்கான் செய்தியிடம் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியால், மக்கள் கூடிவரும் இடங்களையும், நிகழ்வுகளையும் இத்தாலிய அரசு தடை செய்ததையடுத்து, வத்திக்கான் அருங்காட்சியகமும் பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை என்று ஜத்தா அவர்கள் எடுத்துரைத்தார்.

தற்போது, இத்தாலிய அரசும், வத்திக்கான் அரசும் இணைந்து, ஒரு சில விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளதையடுத்து, வத்திக்கான் அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது என்பதை ஜத்தா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்த வேளையில், இணையத்தளத்தில் நடத்தப்பட்ட பல மெய்நிகர் சுற்றுலாக்கள் வழியே, ஆயிரக்கணக்கானோர் அருங்காட்சியகத்தைக் கண்டு களித்தனர் என்று ஜத்தா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.  

கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி முதல் வத்திக்கான் அருங்காட்சியகம் மூடப்பட்டதையடுத்து, அருங்காட்சியகப் பொருள்களை சுத்தம் செய்தல், பழுதுபார்த்தல் போன்ற பராமரிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், ஜூன் 1ம் தேதி முதல் திறக்கப்பட்ட அருங்காட்சியகம் மீண்டும் நவம்பர் 6ம் தேதி மூடப்பட்டு, பராமரிப்பு பணிகள் தொடர்ந்தன என்றும், ஜத்தா அவர்கள் கூறினார்.

சமுதாய தூரத்தைக் கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு, பார்வையாளர்கள் வத்திக்கான் அருங்காட்சியகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை, அருங்காட்சியக இயக்குனர் ஜத்தா அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

03 February 2021, 15:59