தேடுதல்

Vatican News
புனித மாரோன் திருத்தலத்தில், மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் Boutros Rai புனித மாரோன் திருத்தலத்தில், மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் Boutros Rai 

லெபனான் மறுபடி பிறந்து வர கர்தினால்களின் விண்ணப்பம்

லெபனான் தலைவர்கள் தங்கள் சுயநலத்தையும், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளி, மக்களுக்காக திட்டங்கள் வகுக்க முன்வரவேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, லெபனான் நாட்டுத் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்துவந்த நாள்களில், அந்நாட்டு மக்கள், யாருடைய தூண்டுதலும் இன்றி, பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள்செய்வதிலும், சிதைந்துபோன மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவற்றை சீரமைப்பதிலும் தங்கள் தாராள உள்ளத்தை வெளிப்படுத்தினர் என்று வத்திக்கான்  உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பிப்ரவரி 9, இச்செவ்வாயன்று, புனித மாரோன் திருநாள் சிறப்பிக்கப்பட்டதையடுத்து, கீழை வழிபாடு முறை பேராயத்தின் தலைவரான கர்தினால் லியோனார்தோ சாந்திரி அவர்கள், உரோம் நகரின் மாரனைட் பாப்பிறை கல்லூரியில், சீரோ-அந்தியோக்கிய மாரனைட் வழிபாட்டு முறையில் திருவழிபாட்டை முன்னின்று நடத்திய வேளையில் இவ்வாறு கூறினார்.

பெய்ரூட் வெடிவிபத்தைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில், லெபனான் நாட்டிற்காக சிறப்பாக இறைவேண்டல் புரிந்ததையும், பிப்ரவரி 8, இத்திங்களன்று பல நாடுகளின் தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரையில், லெபனான் நாட்டைக் குறித்து பேசியதையும், கர்தினால் சாந்திரி அவர்கள், தன் மறையுரையில் நினைவுகூர்ந்தார்.

'பல்வேறு இடர்கள் நடுவே உறுதியுடன் வளரும் தன்மைகொண்ட கேதுரு மரங்களைக் கொண்ட லெபனான் நாடு' என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளதை தன் மறையுரையில் எடுத்துரைத்த கர்தினால் சாந்திரி அவர்கள், அந்நாட்டு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்ற செபிப்போம் என்று தன் மறையுரையில் விண்ணப்பித்தார்.

இதற்கிடையே, மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutros Rai அவர்கள், லெபனான் நாட்டின் Bkerké எனுமிடத்தில் அமைந்துள்ள புனித மாரோன் திருத்தலத்தில், பிப்ரவரி 9ம் தேதி நிறைவேற்றிய திருப்பலியில், லெபனான் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் ஐ.நா.அவை சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

லெபனான் தலைவர்கள் தங்கள் சுயநலத்தையும், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளி, மக்களுக்காக திட்டங்கள் வகுக்க முன்வரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 8, இத்திங்களன்று பன்னாட்டு தூதர்களிடம் கூறிய கருத்தை, கர்தினால் Rai அவர்கள் தன் மறையுரையில் வாசித்தார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில், கிறிஸ்தவ சமுதாயத்தையும், பன்முக கலாச்சாரத்தையும் வளர்க்கும் சகிப்புத்தன்மை கொண்ட நாடு லெபனான் நாடு என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டிருப்பதையும், கர்தினால் Rai அவர்கள் தன் மறையுரையில் நினைவுகூர்ந்தார்.

10 February 2021, 15:31