90 வயது வானொலிக்கு 117 வயது அருள்சகோதரியின் வாழ்த்து
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
உலகின் துறவறத்தாருள் மிகவும் வயது முதிர்ந்தவரும், மனிதகுலத்தின் வயது முதிர்ந்தோரில் இரண்டாவது இடத்தில் இருப்பவருமான, 117 வயது கத்தோலிக்க அருள்சகோதரி ஒருவர், 90 வயதை சிறப்பிக்கும் வத்திக்கான் வானொலிக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
பிப்ரவரி மாதம் 11ம் தேதி, லூர்து அன்னை திருவிழாவன்று,1904ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த அருள் சகோதரி André அவர்கள், 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி துவக்கப்பட்ட வத்திக்கான் வானொலியின் தினசரி ஒலிபரப்புக்களை இன்றும் கேட்டு, ஆறுதல் அடைபவராக உள்ளார்.
பிப்ரவரி 12, இவ்வெள்ளிக்கிழமை, தன் 90வது பிறந்த நாளை சிறப்பிக்கும், திருத்தந்தையின் வத்திக்கான் வானொலிக்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ள இந்த அருள் சகோதரி, வத்திக்கான் வானொலி 90 வயதை அடைந்தாலும், இன்னும் இளமையாகவே உள்ளது என்று வாழ்த்தியுள்ளார்.
கண்பார்வையை இழந்த நிலையில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இயங்கிவரும், அருள்சகோதரி André அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு செவிமடுப்பது, இவ்வுலகை தனக்கு திறக்கும் சன்னலாக இருப்பதாகவும், தன் இறைவேண்டல் வாழ்வுக்கு அது உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு உலகப்போர், மற்றும், பத்து திருத்தந்தையர்களின் காலத்தை தன் வாழ்நாளில் கடந்து வந்துள்ள இந்த பிரான்ஸ் நாட்டு அருள்சகோதரி, பிற கிறிஸ்தவ சபையில் பிறந்து, தன் 19வது வயதில் கத்தோலிக்க மறையைத் தழுவி, 40வது வயதில் புனித வின்சென்ட் தே பால் பிறரன்பின் புதல்வியர் துறவு சபையில் இணைந்து அருள்சகோதரியானார்.
துறவியாக 77 ஆண்டுகளை செலவிட்டுள்ள அருள்சகோதரி André அவர்கள், முதியோர், மற்றும், கைவிடப்பட்டோரின் இடையே 28 ஆண்டுகள் தொடர்நது சேவையாற்றியுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட அருள் சகோதரி André அவர்கள், அண்மையில், இந்நோயிலிருந்து விடுதலை பெற்ற மிக அதிக வயதுடையவர் என்பதும், ஐரோப்பிய நாடுகளில் மிக அதிக வயதுடையவர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கன.
ஜப்பான் நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி, Kane Tanaka என்பவர், தன் 118ம் வயதை நிறைவுச் செய்துள்ளதைத் தொடர்ந்து, உலகில் அதிக வயது முதியர்ந்தவர்களுள் இரண்டாவது இடத்தில் அருள்சகோதரி André அவர்கள் உள்ளார்.