தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் நீதிபதி Abdel Salam - கோப்புப் படம் 2019 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் நீதிபதி Abdel Salam - கோப்புப் படம் 2019 

உடன்பிறந்த நிலையை நோக்கி, இலட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்

மனித உடன்பிறந்த நிலை குறித்த ஏடு கையெழுத்திடப்பட்ட நாளை, மனித உடன் பிறந்த நிலை உலக நாள் என ஐக்கிய நாடுகள் நிறுவனமே அறிவித்துள்ளது, அதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உடன் பிறந்த நிலையின் உலக நாள் முதன் முதலாக இம்மாதம் 4ம் தேதி, வியாழக்கிழமையன்று சிறப்பிக்கப்படவிருப்பது, இதன் நோக்கத்தையும், கண்ணோட்டங்களையும் மெய்நிலைக்கு கொணர உதவும் என நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் நீதிபதி Abdel Salam.

Al-Azhar இஸ்லாம் தலைமைக்குரு Sheikh Ahmad Al-Tayyeb அவர்களுக்கு ஆலோசகராகவும், மனித உடன்பிறந்தநிலை என்ற ஏடு தயாரிக்கப்படுவதற்கு பெருமளவில் உதவியவருமான நீதிபதி Abdel Salam அவர்கள், இந்த முதல் உலக நாள் குறித்து வத்திக்கான் செய்திகளுடன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட வேளையில், உடன்பிறந்த நிலையை நோக்கி இட்டுச் செல்லப்பட, பல இலட்சக்கணக்கானோர் ஆவலுடன் காத்திருந்ததாகத் தெரிவித்தார்.

மனித உடன்பிறந்த நிலை குறித்த ஏடு கையெழுத்திடப்பட்ட நாளை, மனித உடன் பிறந்த நிலை உலக நாள் என ஐக்கிய நாடுகள் நிறுவனமே அறிவித்துள்ளது, அதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றது என்று கூறிய நீதிபதி  Abdel Salam அவர்கள், பகைமையும் வன்முறையும் அதிகரித்துவரும் சமுதாயத்தில், ஒருமைப்பாடு, மற்றும், உடன்பிறந்தநிலை என்பவை வழியாகவே அவற்றை எதிர்கொள்ள முடியும் என்பது உண்மை என்றார்.

Al-Azhar இஸ்லாம் தலைமைக் குருவும், திருத்தந்தையும் இணைந்து கையெழுத்திட்ட உடன்பிறந்த நிலை ஏடு, மனித சமுதாயங்களும், மதங்களும், தங்களுக்குள் உரையாடலை வளர்த்து, நட்புறவை பேணுவதற்கு ஒரு வரலாற்று மாதிரிகையாக உள்ளது எனவும் கூறினார் நீதிபதி Abdel Salam.

புலம்பெயர்ந்தோர், மற்றும், புகலிடம் தேடுவோரின் நிலை குறித்த திருத்தந்தையின் உரை, அவரின் உயர்ந்த இதயத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதோடு, தன் மக்களின் துன்பங்களை உடனிருந்து அனுபவித்தவராக அவர் பேசியுள்ளது புரிகிறது என மேலும் கூறினார் Abdel Salam.

01 February 2021, 14:39