தேடுதல்

Vatican News
ஐ.நா. மனித உரிமைகள் அவை, மியான்மார் பற்றி நடத்திய 29வது சிறப்பு அமர்வு ஐ.நா. மனித உரிமைகள் அவை, மியான்மார் பற்றி நடத்திய 29வது சிறப்பு அமர்வு  (ANSA)

மியான்மாரில் அமைதி, சமுதாய நீதிக்கு அழைப்பு

மியான்மார் தலைவர்கள், பொதுநலனுக்காகப் பணியாற்றுவதற்கு உண்மையான விருப்பத்துடன் தங்களையும், தங்களின் செயல்பாடுகளையும் அர்ப்பணிக்கவேண்டும் - பேராயர் யுர்க்கோவிச்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

மியான்மாரில் நிலவும் பிரச்சனைகளில் மனித உரிமைகள் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஐ.நா. அவையின் மனித உரிமைகள் அவையின் கூட்டம் ஒன்றில், பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள் உரையாற்றினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புக்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றிவரும் பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவை, மியான்மார் பற்றி நடத்திய 29வது சிறப்பு அமர்வில், பிப்ரவரி 12, இவ்வெள்ளியன்று உரையாற்றியபோது, இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி முதல் தேதியன்று இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பில், நொபல் அமைதி விருது பெற்ற ஆங் சான் சூச்சி அவர்களால் வழிநடத்தப்பட்ட தேசிய மக்களாட்சி கட்சியின் அரசு நீக்கப்பட்டுள்ளது, மற்றும், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைத்த பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், மியான்மார் மக்களுடன் தன் அருகாமை, செபம், மற்றும், தோழமையுணர்வை வெளிப்படுத்தினார்.

2017ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மியான்மாருக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதற்குப்பின், அந்நாட்டை மிகுந்த பாசத்துடன் தன் இதயத்தில் வைத்துள்ளார் என்றும், பிப்ரவரி 7, 8 ஆகிய தேதிகளில், அந்நாட்டில், சமுதாய நீதியும், சனநாயக நல்லிணக்கமும் ஊக்குவிக்கப்படவேண்டும் என திருத்தந்தை கேட்டுக்கொண்டார் என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

பொதுநலனுக்காகப் பணியாற்றுவதற்கு உண்மையான விருப்பத்துடன் தங்களையும், தங்களின் செயல்பாடுகளையும் அர்ப்பணிக்கவேண்டும் என்று, மியான்மார் தலைவர்களையும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

13 February 2021, 15:35