தேடுதல்

Vatican News
கோவிட்-19 பெருந்தொற்றினால் ஆலயங்களில் கட்டுப்பாடுகள் கோவிட்-19 பெருந்தொற்றினால் ஆலயங்களில் கட்டுப்பாடுகள்  (ANSA)

கொரோனா நெருக்கடியால் புனித வார நிகழ்வுகளில் மாற்றங்கள்

கோவிட்-19 பெருந்தொற்றினை மனதில் கொண்டு, இறைவழிபாட்டு பேராயம், இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் புனித வார நிகழ்வுகள் குறித்த சில குறிப்புக்களை, ஒரு மடல் வழியே வெளியிட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் இன்றளவும் நெருக்கடியை உருவாக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்றினை மனதில் கொண்டு, இறைவழிபாட்டு பேராயம், இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் புனித வார நிகழ்வுகள் குறித்த ஒரு சில குறிப்புக்களை, பிப்ரவரி 17, திருநீற்றுப் புதனன்று, ஒரு மடல் வழியே வெளியிட்டுள்ளது.

திருவழிபாட்டு நூல்களில் அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள வழிமுறைகள், இயல்பானச் சூழல்களை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ள வழிமுறைகள் என்பதை மனதில் கொள்ளவேண்டும் என்று இம்மடலின் துவக்கத்தில் கூறும், இப்பேராயத்தின் தலைவர், கர்தினால் இராபர்ட் சாரா அவர்களும், இப்பேராயத்தின் செயலர், பேராயர் ஆர்தர் ரோச் அவர்களும், அரிதான சூழல்களில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதில் கவனம் தேவை என்று கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு, மார்ச் 25ம் தேதி, திருத்தந்தையின் உத்தரவுடன் வெளியிடப்பட்ட வழிமுறைகளை, தலத்திருஅவையின் ஆயர்களுக்கு மீண்டும் நினைவுறுத்துகிறோம் என்று கூறும் இம்மடலில், மிகக் கண்டிப்பான முழு அடைப்பைப் பின்பற்றும் நாடுகளுக்கு உதவியாக, ஒரு சில விதிமுறைகள் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.

புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தையும், தொலைக்காட்சி, மற்றும் சமுதாய ஊடகங்கள் வழியே நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மறைமாவட்டத்தின் சூழலையும், தேவைகளையும் மனதில் கொண்டு, புனித எண்ணெயை அர்ச்சிக்கும் திருப்பலியை வசதியான வேறொரு நாளுக்கு மாற்றிவைக்கலாம் என்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி வெளியிடப்பட்ட மடலின் சில குறிப்புகள்

ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா நாள், வேறொரு தேதிக்கு மாற்றியமைக்க இயலாத காரணத்தால், புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும், மக்களின் பங்கேற்பின்றியும், தேவைப்படும் இடங்களில் கூட்டுத் திருப்பலியோ, சமாதானப் பகிர்வோ இன்றியும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித வாரத் திருவழிபாடுகள் அனைத்தும், வசதி உள்ள இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுதல் சிறந்தது என்றும், இந்த ஒளிபரப்புக்களின் நேரங்கள் மக்களுக்கு அறிவிக்கப்படவேண்டும் என்றும், இப்பேராயம் அறிவித்துள்ளது.

குருத்தோலை ஞாயிறன்று மேற்கொள்ளப்படும் பவனிகள், கோவிலுக்குள், அல்லது, கோவிலைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெறலாம் என்றும், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை, அந்தந்த மறைமாவட்டம் மற்றொரு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித வியாழன் திருப்பலியில், காலடிகளைக் கழுவும் சடங்கு நீக்கப்பட்டுள்ளது என்றும், தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் இத்திருப்பலிகளின் இறுதியில், நற்கருணை பவனி, நற்கருணை ஆராதனை ஆகியவை இடம்பெறாது என்றும் இவ்வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

புனித வெள்ளியன்று மேற்கொள்ளப்படும் வழக்கமான சிறப்பு இறைவேண்டுதல்களுக்குப் பதில், நோயுற்றோர், உயிரிழந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பான இறைவேண்டுதல்கள் இணைக்கப்படலாம் என்றும், திருச்சிலுவை ஆராதனையில், வழிபாட்டை நிகழ்த்துபவர் மட்டும் சிலுவையை முத்தம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிலுவையின் மீது மக்கள் கொண்டுள்ள பக்தியை மனதில் வைத்து, திருச்சிலுவையின் வணக்கம், செப்டம்பர் மாதம் 14, 15 தேதிகளுக்கு மாற்றம் செய்வதற்கு, அந்தந்த மறைமாவட்டங்கள் முடிவு செய்யலாம் என்ற வழிமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

17 February 2021, 14:42