தேடுதல்

Vatican News
திருஅவையின் மனசாட்சி பேராயத்தின் தலைவர், கர்தினால் மௌரோ பியாசென்சா திருஅவையின் மனசாட்சி பேராயத்தின் தலைவர், கர்தினால் மௌரோ பியாசென்சா 

பெருந்தொற்று காலத்தில் கிறிஸ்தவ தவம்

தவக்காலத்தில், நம் மனச்சான்றை பரிசோதிக்கவும், இறை வேண்டல், நோன்பு மற்றும், தர்மம் செய்வதன் வழியாக, அனைவரோடும் நல்லுறவை வளர்க்கவும், திருஅவையின் ஆன்மீக மரபு அழைப்பு விடுக்கின்றது - கர்தினால் பியாசென்சா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவர்கள், தவக்காலத்தில் தவத்தை மேற்கொள்ளவேண்டும் என்று, திருஅவை விடுக்கும் அழைப்பின் ஆழமான அர்த்தத்தை விளக்கும் மடல் ஒன்றை, பிப்ரவரி 18, இவ்வியாழனன்று, திருஅவையின் மனசாட்சி பேராயத்தின் தலைவர், கர்தினால் மௌரோ பியாசென்சா (Mauro Piacenza) அவர்கள் வெளியிட்டுள்ளார்.

தவக்காலம், தவத்தின் காலம் மட்டுமல்ல, அதோடு, கிறிஸ்து, தீமையை முழுமையாக வென்றதில் பங்குகொள்வதற்கும் உரிய காலம் என்றும், கிறிஸ்துவின் இந்த வெற்றி மட்டுமே, பெருந்தொற்றால் துன்புறும் மனித சமுதாயத்திற்கு மகிழ்வையும், மீட்பையும் கொணர முடியும் என்றும், கர்தினால் பியாசென்சா அவர்கள் கூறியுள்ளார்.

தவக்காலம், பெருந்தொற்று

இவ்வாண்டு, ஒரே காலத்தில் இடம்பெறும், தவக்காலம், மற்றும், பெருந்தொற்று பற்றிய சிந்தனைகளை வழங்கியுள்ள கர்தினால் பியாசென்சா அவர்கள், தவக்காலம், திருவழிபாட்டு நாள்காட்டி மற்றும், திருஅவையின் வாழ்வைக் குறிக்கின்றது என்றும்,  பெருந்தொற்று, இன்றைய மனித சமுதாயத்தின் தியாக வாழ்வைக் குறிக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

பெருந்தொற்று காலத்தில், உலகம் முழுவதும், குடிமக்கள், தங்களின் தனிப்பட்ட வாழ்வில், தங்களின் சுதந்திரத்தை கட்டுப்பாட்டுடன் செயல்படுத்தல், தேவையான நலவாழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப, சொந்த வாழ்வுமுறையை தியாகம் செய்தல், மருத்துவமனையிலுள்ள தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுதல் உட்பட, அதிகாரிகள் அறிவித்துள்ள அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றை ஆற்றவேண்டும் என்று விண்ணப்பிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார், கர்தினால் பியாசென்சா.

நல்லதொரு வருங்காலத்தை அமைப்பதற்காக, விரைவில் நிகழப்போகிற ஆபத்தை கண்முன்கொண்டு, ஒவ்வொருவரும், தனக்கும் மற்றவருக்கும் பொறுப்பு என்ற உணர்வில் வாழ்வதற்கு, இதற்குமுன் நினைத்துப்பார்த்திராத அளவுக்கு குடிமக்கள் தியாகம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று, கர்தினால் பியாசென்சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தியாக வாழ்வில் குறைந்தது ஒரு பகுதியாவது, தவக்காலத்தில், கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளவேண்டிய தவமாக உள்ளது என்றும், உண்மையான கிறிஸ்தவ தவம், தற்போதைய அவசரகால நெருக்கடியை உருமாற்றுகிறது என்றும் உரைத்துள்ள கர்தினால் பியாசென்சா அவர்கள், மனச்சான்றை பரிசோதிக்கவும், இறை வேண்டல், நோன்பு மற்றும், தர்மம் செய்வதன் வழியாக, கடவுளோடும், நம்மோடும், பிறரோடும் நல்லுறவை வளர்க்கவும், திருஅவையின் ஆன்மீக மரபு அழைப்பு விடுக்கின்றது என்று கூறியுள்ளார்.

19 February 2021, 14:11