தேடுதல்

'Rondine Cittadella della Pace' என்ற அமைப்பின் இளையோருடன் கர்தினால் பரோலின் 'Rondine Cittadella della Pace' என்ற அமைப்பின் இளையோருடன் கர்தினால் பரோலின் 

"அமைதியின் கோட்டை" இளையோரைப் பாராட்டிய கர்தினால்

"அமைதி என்ற இல்லத்தை நீங்கள் ஒவ்வொரு கல்லாக வைத்து கட்டுகிறீர்கள் என்பதை நான் திருத்தந்தையிடம் எடுத்துரைப்பேன்" - கர்தினால் பியெத்ரோ பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"அமைதி என்ற இல்லத்தை நீங்கள் சிறிது சிறிதாக, ஒவ்வொரு கல்லாக வைத்து கட்டுகிறீர்கள் என்பதை நான் திருத்தந்தையிடம் எடுத்துரைப்பேன்" என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஓர் இளையோர் குழுவிடம் கூறினார்.

"அமைதியின் கோட்டை" என்று பொருள்படும் Cittadella della Pace என்ற ஓர் இத்தாலிய அமைப்பைச் சார்ந்தவர்களை, டஸ்கனி (Tuscany) என்ற பகுதியில் சந்தித்த கர்தினால் பரோலின் அவர்கள், இக்குழுவைச் சேர்ந்தவர்கள், உரையாடலின் வழியே அமைதியின் கலாச்சாரத்தை வளர்க்க மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டினார்.

மனநல இயலில் புலமைபெற்ற Franco Vaccari என்பவர், வன்முறையை வளர்க்கும் மோதல்களைத் தவிர்க்கும் வண்ணம் உரையாடலை, இளையோரிடையே வளர்க்க, இத்தாலியின் டஸ்கனி பகுதியில் Arezzo என்ற நகருக்கருகே 1988ம் ஆண்டு 'Rondine Cittadella della Pace' என்ற அமைப்பை உருவாக்கினார்.

மோதல்களில் ஈடுபட்டுள்ள நாடுகள், அல்லது, குழுக்களிலிருந்து இளையோரைத் தெரிவு செய்து, அவர்கள், ஒருவரையொருவர் சந்திப்பதற்கு வழிவகுக்கும் வண்ணம், இரு ஆண்டுகள் அவர்கள் தங்கிப்பயிலும் வசதிகளைக் கொண்ட The World House என்ற முயற்சியை Rondine அமைப்பு மேற்கொண்டுள்ளது.

தற்போது, ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்களிலிருந்தும், மத்தியக் கிழக்குப் பகுதியிலிருந்தும், 30 இளையோர், இந்த திட்டத்தின் வழியே பயிற்சிபெற்று வருகின்றனர்.

இவ்விளையோரை சந்தித்த கர்தினால் பரோலின் அவர்கள், கடந்த ஓராண்டளவாக உலகின் பல நாடுகள் சந்தித்துவந்துள்ள பல்வேறு பிரச்சனைகளின் நடுவே, இவ்விளையோர் அமைதியைக் கட்டியெழுப்ப தங்கள் நேரத்தையும், சக்தியையும் பயன்படுத்துவது குறித்து தான் மகிழ்வதாகவும், தன் மகிழ்வையும், இந்த முயற்சியைக் குறித்த தன் எண்ணங்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தான் பகிர்ந்துகொள்ளப்போவதாகவும் கூறினார்.

17 February 2021, 14:56