தேடுதல்

Vatican News
கர்தினால் கர்ட் கோக், மற்றும் பேராயர் ஹிலாரியோன் கலந்துகொண்ட கூட்டம் கர்தினால் கர்ட் கோக், மற்றும் பேராயர் ஹிலாரியோன் கலந்துகொண்ட கூட்டம் 

கோவிட்-பெருந்தொற்று நெருக்கடிகளுக்கு கிறிஸ்தவர்கள்...

ஹவானா விமான நிலையத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்களும் சந்தித்த நிகழ்வின் ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு மெய்நிகர் கூட்டம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2016ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதியன்று, கியூபா நாட்டு தலைநகர் ஹவானா விமான நிலையத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்களும் சந்தித்த நிகழ்வின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையும், மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் சபையின் வெளியுறவு துறையும் இணைந்து, மெய்நிகர் கூட்டம் ஒன்றை, இவ்வெள்ளியன்று நடத்தியது.

“திருஅவையும், பெருந்தொற்றும் : சவால்களும் கூறுகளும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அக்கூட்டத்தில் உரையாற்றிய, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் (Kurt Koch) அவர்கள், இக்கூட்டத்தில் பங்குகொண்ட, மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் சபையின் வெளியுறவு துறையின் தலைவரும், கத்தோலிக்கத் திருஅவையோடு ஒன்றிப்பு உறவுகளை மேற்கொள்பவருமான பேராயர் ஹிலாரியோன் அவர்களுக்கு முதலில் நன்றி கூறினார்.

இவ்விரு தலைவர்களும் சந்தித்த இந்த வரலாற்று நிகழ்வின் ஆண்டு நிறைவை, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிப்போம் என்று, அந்த சந்திப்பு நடைபெற்ற நாளுக்கு மறுநாள் தீர்மானிக்கப்படதைக் குறிப்பிட்ட கர்தினால் கோக் அவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த ஆண்டு நிறைவு, பல்வேறு நாடுகளில் பல்வேறு தலைப்புக்களில் சிறப்பிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.

உரோம் மாநகரில் நடைபெற்ற, நான்காவது ஆண்டு நிறைவு நிகழ்வு, கிறிஸ்தவத்தில் புனிதர்களின் ஒன்றிப்பு என்ற தலைப்பில் நடத்தப்பட்டது என்று கூறிய  கர்தினால் கோக் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றோடு தொடர்புடைய விவகாரங்களும், பிரச்சனைகளும், கத்தோலிக்க மற்றும், ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

திருநீற்றுப் புதனுக்கும், இயேசுவின் உயிர்ப்பு ஞாயிறுக்கும் இடைப்பட்ட காலம், இயேசு பாலைநிலத்தில் நாற்பது நாள்கள் நோன்பு இருந்தது பற்றியும், இஸ்ரேல் மக்கள் பாலைநிலத்தில் நாற்பது ஆண்டுகள் அனுபவித்தபெரும் சோதனைகள் மற்றும், ஆபத்துக்கள் பற்றியும் நினைவுக்குக் கொணர்கின்றது என்றுரைத்த கர்தினால் கோக் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று, பாலைநில அனுபவத்தை புதிய வழியில் கொணர்ந்துள்ளது என்று கூறினார்.

பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகள், நம் அனைவருக்கும் ஒரு மனமாற்றக் காலமாக மாறும் என்று நாம் நம்புவோம் மற்றும், செபிப்போம் என்றும், கொரோனா பெருந்தொற்று, தவக்கால திருவழிபாட்டுக் காலத்தை, தேசிய அளவில் ஒதுங்கியிருக்கும் காலமாக மாற்றியுள்ளது, இந்த தவக்காலத்தை உண்மையான தவக்காலமாக மாற்றுவது நம் கடமை என்றும், கர்தினால் கோக் அவர்கள் கூறினார்.

பெருந்தொற்று கொணர்ந்துள்ள, சமுதாய, உளவியல், உடல்நலம், பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் ஏற்படுத்தியுள்ள சவால்களுக்குப் பயனுள்ள பதில்களைக் காண, கிறிஸ்தவர்களாகிய நாம் முயற்சிப்போம் என்று, கர்தினால் கோக் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்த மெய்நிகர் கூட்டத்தில், புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் தலைவர் பேராயர் சால்வாத்தோரே ஃபிசிக்கெல்லா அவர்களும் உரையாற்றினார். 

12 February 2021, 15:38