தேடுதல்

Vatican News
இஸ்பெயினில் வயது முதிர்ந்தோர் இஸ்பெயினில் வயது முதிர்ந்தோர் 

முதியோரைப் பேணிக்காப்பது, கலாச்சாரத்தின் அளவுகோல்

கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகெங்கும் இதுவரை இறந்துள்ளவர்களில், ஏறத்தாழ, 23 இலட்சம் பேர், 75 வயதுக்கு மேற்பட்ட முதியோர் - பேராயர் பாலியா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றினால் அதிக அளவு பாதிக்கப்பட்டோர், வயது முதிர்ந்தோர் என்றும், உலகெங்கும் இதுவரை இறந்துள்ள 2,352,883 மக்களில், ஏறத்தாழ, 2,300,000 பேர், 75 வயதுக்கு மேற்பட்ட முதியோர் என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"முதுமை: நம் எதிர்காலம் - பெருந்தொற்றுக்குப்பின் முதியோர்" என்ற தலைப்பில், ஏடு ஒன்றை, திருப்பீட வாழ்வு கழகம், பிப்ரவரி 09, இச்செவ்வாயன்று, மெய்நிகர்வழி நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.

இக்கூட்டத்தில் துவக்க உரையாற்றிய திருப்பீட வாழ்வு கழகத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், 'தூக்கியெறியும் கலாச்சாரத்தில்' ஊறிப்போன நம் உலகம், முதியோருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவதில்லை என்றும், பெரும் எண்ணிக்கையில் முதியோர் மரணமடைந்தது, உண்மையிலேயே படுகொலை என்றும் கூறினார்.

ஒரு சமுதாயம், கலாச்சாரத்தில் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என்பதற்கு, முதியோரைப் பேணிக்காப்பது, ஓர் அளவுகோல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்தை தன் அறிமுக உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் பாலியா அவர்கள், முதியோர் மீது மனித சமுதாயம் காட்டும் அக்கறையற்ற நிலையை, கோவிட்-19 பெருந்தொற்று வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது என்று கூறினார்.

இந்த பெருந்தொற்றிலிருந்து வெளியேறும்போது, மீண்டும் நம்மால் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது, ஏனெனில், நாம் அனைவரும் இன்னும் சிறந்தவர்களாக வெளியேற முடியும், அல்லது, இன்னும் வலுவற்ற நிலையில் வாழமுடியும் என்று, திருத்தந்தை கூறியுள்ளதை, பேராயர் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டு, வலுவற்ற முதியோரை, பேணிக்காப்பது, நம் சமுதாயத்தின் எதிர்காலமாக அமையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வயது முதிர்ந்தோரின் முக்கியத்துவம் பற்றி பேசும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 31ம் தேதி, ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில், பிப்ரவரி 2ம் தேதி ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணிக்கும் திருநாள் வருவதைக் குறிப்பிட்டுப் பேசுகையில்,  வயது முதிர்ந்த சிமியோனும், அன்னாவும், இயேசுவை மெசியாவாக கண்டுகொண்டதை சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் திருஅவையில் தாத்தா, பாட்டிகள், முதியோர் ஆகியோரை மையப்படுத்தி ஒரு நாள் சிறப்பிக்கப்படும் என்று திருத்தந்தை அறிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 26ம் தேதி சிறப்பிக்கப்படும் கன்னி மரியாவின் பெற்றோர்களாகிய, அதாவது, இயேசுவின் தாத்தா பாட்டியான, புனிதர்கள் சுவக்கின் மற்றும் அன்னா ஆகியோரின் திருநாளுக்கு அருகில் வரும் ஜூலை நான்காம் ஞாயிற்றுக்கிழமையில் இந்த சிறப்பு நாள் இடம்பெறும் என அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, இந்த சிறப்பு நாள் ஜூலை 25ம் தேதி நிகழும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

10 February 2021, 15:26