தேடுதல்

இத்தாலியின் Genovaவில், பெருந்தொற்றினால் இறந்தோர் கல்லறைகளில் செபிக்கும் பேராயர் Marco Tasca இத்தாலியின் Genovaவில், பெருந்தொற்றினால் இறந்தோர் கல்லறைகளில் செபிக்கும் பேராயர் Marco Tasca 

பெருந்தொற்றின் எதிர்விளைவுகளை குறைத்து மதிப்பிடக் கூடாது

நம்பிக்கை, எதிர்நோக்கு, மற்றும், மனித உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றை வளர்க்க, மதங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வழியாக, பல மாதங்களாக பெருந்தொற்று உருவாக்கியுள்ள தனிமையை, அகற்றமுடியும் - பேராயர் யுர்க்கோவிச்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகைத் தொடர்ந்து அச்சுறுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்புக்களை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பல்சமய உரையாடல் கூட்டம் ஒன்றில், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிப்ரவரி 25, இவ்வியாழனன்று, "கொரோனா பெருந்தொற்று காலத்தில் மதங்களின் பணி" என்ற தலைப்பில் நடைபெற்ற பல்சமய கூட்டத்தில், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புக்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றிவரும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

பல்சமய உரையாடல் பற்றி ஜெனீவாவில் நடைபெற்ற, ஆறாவது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், கொரோனா பெருந்தொற்று மட்டுமே, உலகிற்கு இவ்வளவு பெரிய பேரழிவைக் கொணரும் என, ஓராண்டிற்குமுன், நம்மில் யாருமே நினைத்துப் பார்த்ததில்லை என்று கூறினார்.

இந்த பெருந்தொற்றால், புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், பழங்குடி இன மக்கள், சிறார், அன்னையர் போன்றோர் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், ஏற்கனவே மிக வறியநிலையில் வாழ்ந்தோர், இந்த பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கொரோனா பெருந்தொற்றால், சமுதாய, பொருளாதார, அரசியல், மற்றும், ஆன்மீக வாழ்வில் உருவாகியிருக்கும் பாதிப்புக்கள் பற்றி விவிரித்த பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், படைத்தவரோடும், ஒருவர் ஒருவரோடும் அர்த்தமுள்ள உறவுகளில் வாழவேண்டும் என்றே கடவுள் விரும்புகிறார், இதனை நாம் ஒருவர் ஒருவருடன், திறந்தமனத்துடன் மேற்கொள்ளும் உரையாடல் வழியாகவே அடையமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

கடவுளோடும், நம்மிடையேயும் நிலவிவந்த உறவுகளை, கோவிட்-19 பெருந்தொற்று நலிவடையச் செய்துள்ளது என்றும், இது, தனியாட்கள், கலாச்சாரங்கள், மக்கள் மற்றும், நாடுகளுக்கிடையே ஒன்றிப்பு நிலவுவதற்கு அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

நம்பிக்கை, எதிர்நோக்கு, மற்றும், மனித உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றை வளர்க்க மதங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வழியாக, பல மாதங்களாக பெருந்தொற்று உருவாக்கியுள்ள தனிமையை, அகற்றமுடியும் என்பதையும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

26 February 2021, 15:19