தேடுதல்

Vatican News
பேராயர் இவான் யூர்க்கோவிச் பேராயர் இவான் யூர்க்கோவிச் 

சுற்றுச்சுழல் தோழமையுடன் கூடிய வளர்ச்சியை ஊக்குவிக்க

இவ்வுலகம் எதிர்பார்க்காதிருந்த இந்த பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகள், வருங்காலத்தை ஒன்றிணைந்து வடிவமைப்பதற்குரிய வாய்ப்பையும் வழங்கியுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காலத்திற்கு பின் மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிக்காண, நாடுகளுக்கிடையே முழு ஒத்துழைப்பு மிக அவசியம் என வலியுறுத்தினார் பேராயர் இவான் யூர்க்கோவிச்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதாயாகப் பங்கேற்கும் பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், UNCTAD எனப்படும் ஐ.நாவின், வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த அவையில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை, Barbadosல் இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டுள்ள கூட்டத்திற்கு தயாரிப்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், இவ்வுலகம் எதிர்பார்க்காதிருந்த இந்த பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகள், அதன் தீர்வுகள்,  வருங்கால விளைவுகள் என ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை, மற்றும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்பது மட்டுமல்ல, வருங்காலத்தை ஒன்றிணைந்து வடிவமைப்பதற்குரிய வாய்ப்பையும் வழங்கியுள்ளன என தெரிவித்தார்.

'சரிநிகரற்ற, மற்றும், பாதிப்படையக் கூடிய நிலைகளிலிருந்து அனைவருக்குமான வருங்காலத்தை நோக்கி', என்ற தலைப்புடன் வருங்காலத்தை எப்படி வடிவமைப்பது என்ற நோக்கத்தில், கோவிட் நெருக்கடிக்குப் பின்னான உலகில் வர்த்தகம் வழியாக எவ்வாறு ஒத்துழைப்பையும் வளர்ச்சியையும் உருவாக்கலாம் என்பது குறித்து, UNCTAD கூட்டம் விவாதித்து வருகின்றது.

சுற்றுச்சூழல், வளர்ச்சி, மற்றும் பாதுகாப்பு நிலைகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது குறித்தும், ஒவ்வொன்றிற்கும் தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் குறித்தும், சரிநிகரான, அதேவேளை சுற்றுச்சுழல் தோழமையுடன் கூடிய வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டியது குறித்தும் இக்கூட்டத்தில் மேலும் எடுத்தியம்பினார் பேராயர் யூர்க்கோவிச்.

23 February 2021, 15:05