தேடுதல்

கானா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கோவிட் தடுப்பு மருந்து கானா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கோவிட் தடுப்பு மருந்து 

வரிசைகளைத் தாண்டி முன்னுக்குச் செல்லும் செல்வ நாடுகள்

தொழிநுட்பத்திலும், தொடர்புகளிலும் மிக அதிகம் வளர்ந்துவிட்டதாக நாம் எண்ணிவரும் இவ்வேளையில், கோவிட்-19 பெருந்தொற்று நம்மிடையே உள்ள பிளவுகளையும், வலுவற்ற நிலையையும் வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது - பேராயர் யூர்க்கோவிச்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகம் நன்னெறியில் மிகப்பெரும் தோல்வியைச் சந்திக்க உள்ளது, இந்தத் தோல்வியின் விலையாக, வறுமைப்பட்ட நாடுகளின் மக்களையும் அவர்களது வாழ்வாதாரங்களையும் நாம் தரவேண்டியிருக்கும் என்று WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் கூட்டத்தில் அண்மையில் பேசப்பட்டதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கூட்டமொன்றில் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள், WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனம் பிப்ரவரி 23 இச்செவ்வாயன்று, அறிவுசார்ந்த சொத்துரிமைகள் என்ற கருத்துடன் நடத்திய கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

இவ்வுலகம் தொழிநுட்பத்திலும், குறிப்பாக, தொடர்புகளிலும் மிக அதிகம் வளர்ந்துவிட்டதாக நாம் எண்ணிவரும் இவ்வேளையில், கோவிட்-19 பெருந்தொற்று நம்மிடையே உள்ள பிளவுகளையும், வலுவற்ற நிலையையும் வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது என்று பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த பெருந்தொற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து ஊசிகள் உலகினர் அனைவரையும் அடைவதற்குப் பதில், சக்தியும், செல்வமும் நிறைந்த நாடுகள் வரிசைகளைத் தாண்டி முன்னுக்கு வருவது வேதனை அளிக்கிறது என்று, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் அதன் பல்வேறு கிளை ஆய்வுகள் ஆகியவற்றில், நடைபெறும் போட்டிகளும், காப்புரிமை மோதல்களும், அறிவுசார்ந்த சொத்துரிமைகள் குறித்து ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளன என்று பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

தடுப்பு மருந்துகள், அவை அதிகமாகத் தேவைப்படும் வறியோரை அடையும்போதுதான் உலக சமுதாயம் நம்பிக்கை ஒளியை பெற்றுள்ளது என்று நாம் கூறமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டின் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் Urbi et Orbi செய்தியில் கூறியதை, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையின் இறுதியில் மேற்கோளாகக் கூறி முடித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2021, 15:56