தேடுதல்

பேராயர் Eugene Nugent பேராயர் Eugene Nugent  

இஸ்லாம் உலகோடு உரையாடல் நடத்தவேண்டியதன் முக்கியத்துவம்

கரீபியன் பகுதியிலுள்ள, மிகவும் வறிய நாடாகிய ஹெய்ட்டியில் இடம்பெறும் இயற்கைப் பேரிடர்கள், நிலையற்ற அரசியல், மற்றும், வன்முறையால், அந்நாடு பற்றி ஊடகங்கள் நிறைய எதிர்மறையான செய்திகளையே பதிவுசெய்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

குவைத் மற்றும், கத்தார் நாடுகளுக்கு, திருப்பீடத் தூதராக, தான் நியமிக்கப்பட்டிருப்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்லாம் உலகோடு உரையாடல் நடத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது என்று, பேராயர் Eugene Nugent அவர்கள் கூறியுள்ளார்.

2015ம் ஆண்டிலிருந்து, ஹெய்ட்டி நாட்டில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிவந்த பேராயர் Nugent அவர்களை, சனவரி 07, இவ்வியாழனன்று, குவைத் மற்றும், கத்தார் நாடுகளுக்கு, திருப்பீடத் தூதராக நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த புதிய நியமனம் குறித்தும், ஹெய்ட்டியில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும், வத்திக்கான் செய்தித்துறையிடம் பகிர்ந்துகொண்ட, பேராயர் Nugent அவர்கள், இந்த புதிய நியமனம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்சமய உரையாடலுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தின் வெளிப்பாடு என்று கூறியுள்ளார்.

மத்தியக் கிழக்குப் பகுதி பற்றி, நான் சிறிதளவே அறிந்திருக்கிறேன், ஆயினும், அப்பகுதி பற்றி கற்றுக்கொண்டு பணியாற்றுவதற்கு ஆவலோடு உள்ளேன் என்றுரைத்த, அயர்லாந்து நாட்டவரான பேராயர் Nugent அவர்கள், தனது முந்தைய பணிகள் போன்று, இந்த புதிய பணிக்கும், அன்னை மரியாவும், புனித யோசேப்பும் உதவுவார்கள் என்றும் கூறினார்.

கரீபியன் பகுதியிலுள்ள ஹெய்ட்டி, மிகவும் வறிய நாடு, அந்நாட்டில் இடம்பெறும் இயற்கைப் பேரிடர்கள், நிலையற்ற அரசியல், மற்றும், வன்முறையால், அந்நாடு பற்றி நிறைய எதிர்மறையான செய்திகளையே ஊடகங்கள் பதிவுசெய்கின்றன, ஆனால், தனக்கு அந்நாட்டில் ஆழமான ஆன்மீக அனுபவம் கிடைத்தது, மக்களும் மிக அன்பானவர்கள் என்று கூறினார், பேராயர் Nugent.

09 January 2021, 14:16