தேடுதல்

Vatican News
சமய சகிப்புத்தன்மை, பாகுபாடு அகற்றல், உரையாடல், ஒப்புரவு சமய சகிப்புத்தன்மை, பாகுபாடு அகற்றல், உரையாடல், ஒப்புரவு  (All rights reserved)

வளர்ந்துவரும் சமய சகிப்பற்றதன்மை நிறுத்தப்பட...

கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும், ஏனைய மதங்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு எதிராக நிலவும் பிரச்சனைகள் அகற்றப்பட, OSCE அமைப்பு தீவிர நடவடிக்கை எடுக்கும் - அருள்பணி உர்பான்சிஸ்க்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்க்கெதிராக, ஐரோப்பாவில் தொடர்ந்து வளர்ந்துவரும் சகிப்பற்றதன்மையும், பாகுபாடும் களையப்படுவதற்கு, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற தன் நம்பிக்கையை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பாவில் பாதுகாப்பையும், ஒத்துழைப்பையும் வளர்க்க உருவாக்கப்பட்டுள்ள OSCE என்ற அமைப்பு ஏற்பாடு செய்யும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி யானுஸ் உர்பான்சிஸ்க் (Janusz Urbańczyk) அவர்கள், சனவரி 14, இவ்வியாழனன்று வியன்னாவில் நடைபெற்ற ஓர் இணையவழி கூட்டத்தில், இவ்வாறு கூறினார்.

கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும், ஏனைய மதங்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு எதிராக நிலவும் பிரச்சனைகள் அகற்றப்பட, OSCE அமைப்பு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார், அருள்பணி உர்பான்சிஸ்க்.

OSCE அமைப்பிற்குத் தற்போது தலைமை வகிக்கும் சுவீடன் நாட்டு பிரதிநிதி, இந்தப் பிரச்சனை மீது மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறியுள்ள அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், சகிப்பற்றதன்மை, மற்றும், பாகுபாட்டை எதிர்நோக்கும் சமயக் குழுமங்களின் முக்கிய தேவைகள் நிவர்த்திசெய்யப்படவேண்டும், அதேநேரம், இதில் பாகுபாடுகள் காட்டப்படக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

மனித உரிமைகள், மக்களாட்சி, பாலியல் சமத்துவம் போன்ற விவகாரங்கள் மீது, சுவீடன் தலைமைத்துவம் சிறப்புக் கவனம் செலுத்த தீர்மானித்திருப்பதை, திருப்பீடம் வரவேற்றுள்ளது என்று கூறியுள்ள அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், OSCE அமைப்பின் பகுதிகளில், அமைதி காக்கப்படுவதற்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.

போர்களைத் தடுத்தல், பிரச்சனைகளைக் கையாளுதல், போர்களுக்குப்பின் இடம்பெறும் மறுவாழ்வு போன்றவற்றில், பெண்களின் பங்கு தவிர்க்கமுடியாதது என்று, அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் கூறியுள்ளார்.

15 January 2021, 14:00