தேடுதல்

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நாள் திருப்பலியில் திருத்தந்தை - கோப்புப் படம் 2019 அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நாள் திருப்பலியில் திருத்தந்தை - கோப்புப் படம் 2019 

அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள துறவியருக்கு மடல்

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நாள் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, பிப்ரவரி 2ம் தேதி, மாலை 5.30 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் சிறப்புத் திருப்பலி நடைபெறும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆண்டவரை கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் விழா, பிப்ரவரி 2ம் தேதி, வருகிற செவ்வாயன்று சிறப்பிக்கப்படுவதையொட்டி, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நிறுவனங்கள், மற்றும் திருத்தூது வாழ்வின் சபைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் João Braz de Aviz அவர்களும், இப்பேராயத்தின் செயலர் பேராயர் José Rodríguez Carballo அவர்களும் இணைந்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள இருபால் துறவியர் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ள இம்மடலில், துறவு வாழ்வு, நன்றியின் கனிகளை எப்போதும் தாங்கியிருக்கவேண்டும் என்ற அழைப்பு விடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நாள் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, பிப்ரவரி 2ம் தேதி, மாலை 5.30 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் சிறப்புத் திருப்பலி நடைபெறும் என்பதை கர்தினால் Braz de Aviz அவர்கள், இம்மடலின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக, துறவு இல்லங்கள் பலவற்றில் நிகழ்ந்துள்ள உயிர் பலிகள், கத்தோலிக்கத் திருஅவைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என்பதை தன் மடலில் குறிப்பிடும் கர்தினால் Braz de Aviz அவர்கள், உடல் நலக்குறைவாலும், நோயுற்றோர் நடுவே உழைத்ததன் விளைவாகவும் இறையடி சேர்ந்துள்ள துறவியர் அனைவரையும் இறைவனின் சன்னிதியில் பிப்ரவரி 2ம் தேதி நினைவுகூர, அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைவரும் உடன்பிறந்தோர் என்ற கருத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'Fratelli tutti' திருமடல், உலகெங்கும் உடன்பிறந்த உணர்வு மீண்டும் உயிர் பெறுவதற்கு ஓர் அழைப்பாக உள்ளது என்பதை, தன் மடலில் குறிப்பிட்டுள்ள கர்தினால் Braz de Aviz அவர்கள், உலக மக்கள் அனைவரும் உடன்பிறந்தோர் என்ற உணர்வை வளர்ப்பதில், துறவியர் ஆற்றும் பணிகள் முக்கியமானது என்று கூறியுள்ளார்.

புனித யோசேப்புக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டில், திருக்குடும்பம், மற்றும், திருஅவையின் பாதுகாவலரான புனித யோசேப்பு, மற்றும், திருஅவையின் அன்னையாகிய கன்னி மரியா, ஆகிய இருவரின் பாதுகாப்பில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டுள்ள அனைவரையும் ஒப்படைப்பதாக வேண்டி, கர்தினால் Braz de Aviz அவர்களும், பேராயர் Carballo அவர்களும் இம்மடலை நிறைவு செய்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2021, 14:27