தேடுதல்

Vatican News
வீடற்ற வறியோருக்கு திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், கோவிட்-19 தடுப்பூசி மருந்து வீடற்ற வறியோருக்கு திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், கோவிட்-19 தடுப்பூசி மருந்து   (Vatican Media)

வத்திக்கானில் வீடற்ற வறியோருக்கு கோவிட்-19 தடுப்பூசி மருந்து

வீடற்ற 25 பேருக்கு, இப்புதன் காலையில், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வீடற்ற வறியோருக்கு கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்படுவதை திருத்தந்தை பிரான்சிஸ் உறுதி செய்துள்ளார் என்று, வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

சனவரி 20 இப்புதனன்று, வத்திக்கான் செய்தித்துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில், வீடற்ற 25 பேருக்கு, இப்புதன் காலையில், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டதென்று சொல்லப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும், திருத்தந்தையின் தர்மப்பணிகள் அலுவலகத்தின் வழியே உதவிகள் பெற்று வருபவர்கள் என்றும், இனிவரும் நாள்களில், இன்னும் பல வறியோருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் தர்மப்பணிகள் அலுவலகம் வழியே, உறைவிடமும், வேறு உதவிகளும் பெறும் பல வறியோரில், இப்புதனன்று தடுப்பூசி பெற்றவர்கள், 60வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், இவர்களில் இத்தாலியரும், வேற்று நாட்டவரும் அடங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் இந்த முயற்சியில் பங்கேற்கும், Sant Egidio கிறிஸ்தவ பிறரன்பு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் Carlo Santoro அவர்கள் பேசுகையில், "இந்த பெருந்தொற்றிலிருந்து யாரும் தனியே காப்பாற்றப்படுவதில்லை" என்று திருத்தந்தை கூறி வந்துள்ளதை, இந்த முயற்சியில் காண்கிறோம் என்று கூறினார்.

திருத்தந்தையின் தர்மப்பணிகளை ஒருங்கிணைக்கும் கர்தினால் Konrad Krajewski அவர்களின் தலைமையில், கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடி காலத்தில், வறியோருக்கும், வீடற்றோருக்கும் பல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2020ம் ஆண்டு கிறிஸ்மஸ் காலத்தையொட்டி, 4000த்திற்கும் அதிகமான வறியோருக்கு, கோவிட்-19 கிருமியைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன என்பதும், உலகின் பல்வேறு வறிய நாடுகளுக்கு திருத்தந்தையின் பெயரால் மருந்துகளும், முகக்கவசங்களும், சுவாசக் கருவிகளும் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கன.

21 January 2021, 15:12