தேடுதல்

Vatican News
பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்  

அணு ஆயுதமற்ற உலகிற்கு உரையாடல் அவசியம்

போர், ஒருபோதும் வேண்டாம், ஆயுதமோதல்கள் இனிமேல் ஒருபோதும் வேண்டாம், இவ்வளவு துன்பங்கள் ஒருபோதும் வேண்டாம், அணு ஆயுதங்களற்ற உலகு தேவை - ஹிரோஷிமா அமைதி நினைவிடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில், அமைதி மற்றும், பாதுகாப்பை, ஒருவர் ஒருவரை அழிப்பதற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலின் அடிப்படையில் கட்டியெழுப்ப இயலாது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், வத்திக்கான் சமூகத்தொடர்புத் துறையிடம் கூறியுள்ளார்.

2021ம் ஆண்டு சனவரி 22, இவ்வெள்ளியன்று உலகளாவிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் (TPNW) நடைமுறைக்கு வந்துள்ளதை முன்னிட்டு, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்களுக்குப் பேட்டியளித்த, திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

வேதியியல், மற்றும், உயிரியல் ஆயுதங்கள் போன்று, பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் பட்டியலில், அணு ஆயுதங்களும் உள்ளன என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், உலகளாவிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு, திருப்பீடம் தன்னை சிறப்பாக அர்ப்பணித்திருந்ததற்குரிய காரணங்களையும் தெளிவுபடுத்தினார்.

இப்போதைய TPNW ஒப்பந்தத்திற்கும், 1970ம் ஆண்டின் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திற்கும் (NPT) இடையேயுள்ள தொடர்பு பற்றியும் எடுத்துரைத்த பேராயர் காலகர் அவர்கள், உலகளாவிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தம், அந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை சட்டப்படி தடைசெய்கின்றது என்று கூறினார்.

அதேநேரம், அணு ஆயுதங்களைப் பரவவிடாமல் இருத்தல், இத்தகைய ஆயுதங்களைப் படிப்படியாகக் களைதல், அணு தொழில்நுட்பம், அமைதியை நிலைநிறுத்த பயன்படுத்தப்படுவதற்கு ஒத்துழைப்பு ஆகிய மூன்று கூறுகளை, 1970ம் ஆண்டின் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் வலியுறுத்துகிறது என்று, பேராயர் காலகர் அவர்கள் குறிப்பிட்டார்.

உலக அளவில், அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கொணரப்படுவதற்கு, ஐக்கிய நாடுகளின் பொது அவை, 2017ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி இசைவு தெரிவித்தது. அதே ஆண்டு, செப்டம்பர் 20ம் தேதி, அவ்வொப்பந்தம், நாடுகளின் கையெழுத்திற்கு விடப்பட்டது. அதே நாளில், நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில், பேராயர் காலகர் அவர்கள் அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இவ்வெள்ளியன்று நடைமுறைக்கு வந்துள்ள உலகளாவிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதங்களை மேம்படுத்துதல், சேமித்தல், பரிசோதனை செய்தல், அவற்றைப் பயன்படுத்தவிருப்பதாக அச்சுறுத்தல் உட்பட, அணு ஆயுதங்களோடு தொடர்புடைய அனைத்தும் தடைசெய்யப்படுகின்றன.

22 January 2021, 15:21