தேடுதல்

புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் தன்னார்வத் தொண்டர் புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் தன்னார்வத் தொண்டர் 

அக்கறையற்ற நிலையை எதிர்த்து Fratelli tutti

அனைத்து நாடுகளிலும் வாழும் அனைத்து மக்களிடையே இன்னும் அதிகமான உடன்பிறந்த உணர்வும், சமுதாய நட்பும் உருவாகவேண்டும் என்பதே Fratelli tutti திருமடலின் உயிர்நாடியான கருத்து - கர்தினால் மைக்கில் செர்னி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அனைவரின் உள்ளங்களில் எழும் மகிழ்வு, நம்பிக்கை, துயரம், கவலை என்ற அனைத்து உணர்வுகளையும் நேரடியாக நம் கவனத்திற்கு கொணரும் ஒரு மடல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள Fratelli tutti திருமடல் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் ஓர் அங்கமாக இயங்கும் குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் துறையின் நேரடிச் செயலர் கர்தினால் மைக்கில் செர்னி அவர்கள், அனைத்துலக கத்தோலிக்க குடிபெயர்வு பணிக்குழு (ICMC) என்ற அமைப்பு உருவாக்கியுள்ள புதிய வலைத்தளத்திற்கு வழங்கியுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

அனைத்து நாடுகளிலும் வாழும் அனைத்து மக்களிடையே இன்னும் அதிகமான உடன்பிறந்த உணர்வும், சமுதாய நட்பும் உருவாகவேண்டும் என்பதே, இத்திருமடலின் உயிர்நாடியான கருத்து என்பதை, கர்தினால் செர்னி அவர்கள், தன் கட்டுரையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சுயநலத்தில் துவங்கி, தேசிய உணர்வு, தனிமனித சுதந்திரம் என்ற வெவ்வேறு கொள்கைகளின் வழியே, உலகெங்கும் பரவிவரும் அக்கறையற்ற நிலையை எதிர்த்து, அன்பையும், திறந்த உள்ளத்தையும் வளர்ப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலில் அழைப்பு விடுத்துள்ளார் என்று, கர்தினால் செர்னி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதர்கள் அனைவரும், அவரவர் பிறந்த நாட்டில், ஊரில் தங்கிவாழ்வதே மிகச் சிறந்த நிலை எனினும், சுற்றுச்சூழல் சீரழிவாலும், மோதல்களாலும், இன்னும் பல சமுதாய ஏற்றத்தாழ்வுகளாலும், மனிதர்கள், புலம்பெயரும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதை, கர்தினால் செர்னி அவர்கள், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, தங்கள் சொந்த நாடுகளிலிருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாகும் மனிதர்களை வரவேற்கவும், அவர்களுக்கு வாழ்வளிக்கவும், 'நல்ல சமாரியரின்' வழிமரபினர்களான கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மடலில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார் என்று, கர்தினால் செர்னி அவர்களின் கட்டுரை பதிவுசெய்துள்ளது.

குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு நாம் வழங்கவேண்டிய வரவேற்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய நிலைகளில், நமக்குள்ள கடமைகளை, Fratelli tutti திருமடல் தெளிவுபடுத்துகிறது என்பதையும், கர்தினால் செர்னி அவர்கள், தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

மனிதாபிமானம் மிக்க, உடன்பிறந்த உணர்வுகொண்ட சமுதாயத்தை, நீதி, மற்றும் அன்பின் அடிப்படையில் கட்டியெழுப்ப, Fratelli tutti மடல் நம்மை அழைக்கிறது என்று கூறியுள்ள கர்தினால் செர்னி அவர்கள், இக்கட்டுரையின் இறுதியில், திருத்தந்தை, தன் மடலில் பகிர்ந்துள்ள செபத்தை மேற்கோளாக வழங்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2021, 14:25