தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், சுவீடன் நாட்டில், லூத்தரன் உலக அவையின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் செப வழிபாடு - கோப்புப் படம் 2016 திருத்தந்தை பிரான்சிஸ், சுவீடன் நாட்டில், லூத்தரன் உலக அவையின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் செப வழிபாடு - கோப்புப் படம் 2016 

"மோதல்களை விடுத்து, ஒன்றிணைப்பை நோக்கி"

கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும், மோதல்களை விடுத்து, ஒன்றிணைதல் என்ற இலக்கை நோக்கி, செல்லும் முயற்சிகளை மேற்கொள்வதாக வெளியான அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும், மோதல்களை விடுத்து, ஒன்றிணைதல் என்ற இலக்கை நோக்கி, செல்லும் முயற்சிகளை மேற்கொள்வதாக, இவ்விரு அமைப்பின் பிரதிநிதிகள் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் பிரதிநிதிகளும், லூத்தரன் உலக அவையின் பிரதிநிதிகளும் இணைந்து, சனவரி 3, இஞ்ஞாயிறன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஒற்றுமையை நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கூறப்பட்டுள்ளன.

கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து, மார்ட்டின் லூத்தர் அவர்கள் விலக்கிவைக்கப்பட்ட சனவரி 3ம் தேதி, இவ்வாண்டு 500ம் ஆண்டு நிறைவை அடைந்துள்ள வேளையில், அவரை விலக்கிவைக்க காரணமாக இருந்த கொள்கைகளில் கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும், மாற்றங்களை உருவாக்க கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் முயற்சிகள், இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் செயலர், ஆயர் Brian Farrell அவர்கள், இந்த அறிக்கை குறித்து, வத்துக்கான் செய்திக்கு பேட்டியளித்த வேளையில், 1999ம் ஆண்டு முதல், கத்தோலிக்கரும் லூத்தரன் சபையினரும் தங்களுக்கிடையே இருந்துவந்த வேறுபாடுகளைக் களையும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கத்தோலிக்கரும் லூத்தரன் சபையினரும் மேற்கொண்டு வரும் ஒருங்கிணைப்பு முயற்சியின் ஒரு வெளிப்பாடாக சனவரி 3, கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்ட அறிக்கை இருந்தது என்று குறிப்பிட்ட ஆயர் Farrell அவர்கள், 2016ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவீடன் நாட்டிற்கு சென்று, அங்கு லூத்தரன் உலக அவையின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட செப வழிபாட்டைச் சுட்டிக்காட்டினார்.

"மோதல்களை விடுத்து, ஒன்றிணைப்பை நோக்கி" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய அறிக்கை, இரு தரப்பினருக்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்று, ஆயர் Farrell அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

06 January 2021, 15:39