குரோவேஷியாவுக்கு உதவி தேவை, காரித்தாஸ்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
அண்மையில் கடுமையான நிலநடுக்கங்களால் தாக்கப்பட்டுள்ள குரோவேஷியா நாட்டில், வீடுகளை இழந்துள்ள மக்கள், பாதுகாப்போடும், மாண்போடும் வாழ்வதற்கு, எட்டு இலட்சத்து எண்பதாயிரம் யூரோக்கள் நிதி உதவிக்கு, விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம்.
கடந்த டிசம்பர் 29ம் தேதி குரோவேஷியாவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் அதிர்வுகள், பல்வேறு அருகாமை நாடுகளிலும் உணரப்பட்டன என்றுரைத்த காரித்தாஸ் நிறுவனம், அதற்கு இருநாள்கள் சென்று, மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளது.
இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில், கடந்த 140 ஆண்டுகளில் முதன்முறையாக, இவ்வளவு கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன என்றும், முதல் முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டபின், ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் தரை அதிர்வதை உணரும் மக்கள், அச்சத்திலும், கலக்கத்திலும் வாழ்ந்து வருகின்றனர் என்றும் கூறியது.
ஏறத்தாழ இரண்டாயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியின் நிலபரப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், குரோவேஷிய காரித்தாசின் இருநூறு தன்னார்வலர்கள், உணவு மற்றும், நலவாழ்வு சார்ந்த பொருள்களை விநியோகம் செய்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
Petrinja மற்றும், Glina கிராமங்களில் 90 விழுக்காடு வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும், இச்சூழலில், மனிதாபிமான உதவிகள், கிடைத்து வருகின்றன என்றும், மேலும் உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், காரித்தாஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், குரோவேஷியாவிற்கு பன்னாட்டு உதவிகள் வழங்கப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.