தேடுதல்

Vatican News

நம் பொதுவான இல்லத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்

ம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் கட்டியெழுப்புவதற்கு, ஒன்றுசேர்ந்து உழைப்பதைத் தவிர வேறு வழியே கிடையாது - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் கட்டியெழுப்புவதற்கு, ஒன்றுசேர்ந்து உழைப்பதைத் தவிர வேறு வழியே கிடையாது என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உச்சிமாநாடு ஒன்றிற்கு அனுப்பிய காணொளிச் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

சனவரி 25, இத்திங்களன்று, தொடங்கியுள்ள காலநிலை மாற்றத்தைக் குறைப்பது குறித்த இணையவழி உச்சி மாநாட்டில் பங்குபெற்ற பிரதிநிதிகளிடம், காணொளிச் செய்தி வழியாக தன் எண்ணங்களைப் பகிர்நதுகொண்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், ஒருங்கிணைந்த வளர்ச்சியை, இன்னும் சிறப்பாக அமைப்பதற்கு, தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

காலநிலை மாற்றத்தைக் குறைக்க, பலனுள்ள தீர்மானங்கள் எடுக்கப்படுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதோடு, அதில் பங்குபெறுவோரையும் ஊக்கப்படுத்தியுள்ளார் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

இறைவா உமக்கே புகழ் (Laudato sí) என்ற திருமடலில், நம் பூமியைப் பாதுகாப்பது குறித்து  திருத்தந்தை வலியுறுத்தியுள்ள கருத்துக்களையும் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், காலநிலை மாற்றம், நம் காலத்தில் மனித சமுதாயம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு நாம் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை, அறிவியல் ஆய்வுகள் நமக்கு அச்சுறுத்தல் கொடுத்துவருகின்றன என்றுரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், பசுமை இல்ல வாயு வெளியேற்றம் பற்றியும் கூறியுள்ளார்.

பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு, தொழில்நுட்ப ஆக்ரமிப்பு மட்டுமல்ல, நம் நுகர்வுத்தன்மை, வாழும் நிலை, வழங்கப்படும் கல்வி போன்றவையும் காரணம் என்றும், உலகினர் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஒன்றிணைந்தே தீர்க்கமுடியும் என்பதை, கோவிட்-19 பெருந்தொற்று தெளிவாக உணர்த்தியுள்ளது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

26 January 2021, 15:25