தேடுதல்

Vatican News
கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு மருந்தை வழங்க தயாரிக்கும் மருத்துவப் பணியாளர் கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு மருந்தை வழங்க தயாரிக்கும் மருத்துவப் பணியாளர்   (AFP or licensors)

கோவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்க வழியமைக்கப்பட..

தற்போது கோவிட்-19 பெருந்தொற்றுக்கு, உலகில், 57க்கும் அதிகமான தடுப்பூசிகள், மனிதர்களிடம் பரிசோதனையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - New York Times

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பூசிகள் வழங்கப்படும் நடவடிக்கையில், வறியோர் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதிசெய்யப்படவேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைப்பு ஒன்று நடத்திய கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

ஜெனீவாவில் நிகழும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பாகப் பங்கேற்கும் பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், டிசம்பர் 09, இப்புதனன்று அந்நகரில் உலகளாவிய அறிவு காப்புரிமை அமைப்பு (WIPO) நடத்திய மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றுகையில்,  இவ்வாறு கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று சிகிச்சையில் வழங்கப்படும் மருந்துகள், ஊசிகள், பரிசோதனைகள் மற்றும், நோய் தடுப்பு கருவிகள் ஆகியவை அனைவருக்கும் கிடைக்குமாறு வழியமைக்கப்படவேண்டும் என்று, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் வலியுறுத்தினார்.

தற்போது கோவிட்-19 பெருந்தொற்றுக்கு, உலகில், 57க்கும் அதிகமான தடுப்பூசிகள், மனிதர்களிடம் பரிசோதனையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று New York Times இதழ் கூறியிருப்பதைக் குறிப்பிட்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், மேற்கத்திய நாடுகளில் பிரித்தானியா, இம்மாதம் 2ம் தேதி, கொரோனா பெருந்தொற்று பரிசோதனை தடுப்பூசியை அனுமதித்துள்ளது என்று கூறினார்.

புதிய ஆண்டில், மற்ற நாடுகள் தடுப்பூசிகளைப் பரிசோதிப்பதற்குத் திட்டமிட்டுள்ளவேளை, அறிவுசார்ந்த காப்புரிமை, எப்போதும் பொதுநலனுக்குப் பயன்படுவதாக அமைக்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், பேராயர் யூர்க்கோவிச்.

12 December 2020, 15:11