தேடுதல்

Vatican News
குறைவான எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்கும் திருப்பலி குறைவான எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்கும் திருப்பலி  (Vatican Media)

கிறிஸ்மஸ் நாளன்று நான்கு திருப்பலிகள் நிறைவேற்ற அனுமதி

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று நான்கு திருப்பலிகள் நிறைவேற்ற வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி, புத்தாண்டு நாளன்றும், திருக்காட்சிப் பெருவிழாவன்றும் அருள்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று, அருள்பணியாளர்கள் நான்கு திருப்பலிகளைக் கொண்டாடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்.

கொள்ளைநோயின் நெருக்கடிகள் உருவாக்கியுள்ள விதிமுறைகளால், கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலியில் மக்களின் பங்கேற்பு குறைக்கப்பட்டிருப்பதை மனதில் கொண்டு, திருத்தந்தை, இந்த சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளார்.

டிசம்பர் 16ம் தேதி இப்புதனன்று, திருவழிபாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்களும், இப்பேராயத்தின் செயலர் பேராயர் ஆர்தர் ரோச் அவர்களும் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், திருத்தந்தை வழங்கியுள்ள இந்த அனுமதி வெளியிடப்பட்டுள்ளது.

வழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான இந்தப் பெருவிழாவில் மக்கள் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் பங்கேற்கும் கருத்துடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பலியில் பங்கேற்கும் கடமை உள்ள முக்கிய நாள்களில், அருள்பணியாளர்களின் தட்டுப்பாட்டையும், மேய்ப்புப்பணித் தேவைகளையும் பொருத்து, அருள்பணியாளர் ஒருவர், இரண்டு, அல்லது, மூன்று திருப்பலிகளை நிறைவேற்ற, தலத்திருஅவை அதிகாரிகள் அனுமதி வழங்கமுடியும் என்ற வழிபாட்டு விதிமுறையைத் தாண்டி, இந்த ஆண்டு, திருத்தந்தை, நான்கு திருப்பலிகள் நிறைவேற்ற அருள்பணியாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று நான்கு திருப்பலிகள் நிறைவேற்ற வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி, புத்தாண்டு நாளன்று சிறப்பிக்கப்படும், மரியா இறைவனின் தாய் பெருவிழாவன்றும், திருக்காட்சிப் பெருவிழாவன்றும் அருள்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று திருவழிபாட்டு பேராயம் அறிவித்துள்ளது.

17 December 2020, 15:20