தேடுதல்

Vatican News
PUERTORICO நாட்டில், கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்படுதல் PUERTORICO நாட்டில், கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்படுதல்  (AFP or licensors)

தடுப்பூசி குறித்த நன்னெறி கேள்விகளும் விளக்கமும்

மருத்துவப் பணியாளர்களுக்கோ, தடுப்பூசிகளைப் பெறுபவர்களுக்கோ மன உறுத்தலைத் தராதவகையில் மருந்துக்களைத் தயாரிக்குமாறு விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கருச்சிதைவு செய்யப்பட்ட உயிர்களின் திசுக்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள, கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளின் நன்னெறி சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, திருப்பீடத்தின் விசுவாசக்கோட்பாட்டுப் பேராயம்.

கருச்சிதைவு செய்யப்பட்ட உயிர்களின் திசுக்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள, கோவிட்-19 தடுப்பு மருந்தை மனச்சான்றுடன் ஏற்றுக்கொள்ள முடியுமா, என பல்வேறு திருஅவைகளில் எழுந்துள்ள கேள்வி குறித்து, டிசம்பர் 21ம் தேதி, திங்களன்று, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பீடத்தின் விசுவாசக்கோட்பாட்டுப் பேராயம், கருச்சிதைவுச் செய்யப்பட்ட திசுக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்த நன்னெறி கேள்விகளுக்கு 2005, மற்றும், 2008ம் ஆண்டுகளில், திருஅவை, தெளிவான விளக்கங்கள் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே இந்த தடுப்பூசிகள் சில நாடுகளில் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இதன் பாதுகாப்பு, மற்றும், செயல்திறன் குறித்து எவ்வித தீர்ப்பையும் வழங்க தாங்கள் முன்வரவில்லை எனவும்,  இயற்கையாகவே  கருச்சிதைவு அடையாமல், கருச்சிதைவு செய்யப்பட்ட உயிர்களின் திசுக்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட இத்தடுப்பூசிகளின் நன்னெறி சார்ந்த கேள்விகளையே தாங்கள் நோக்க உள்ளதாக  இவ்வறிக்கை உரைக்கிறது.

கருச்சிதைவு செய்யப்பட்ட உயிர்களின் திசுக்களிலிருந்து எடுக்கப்பட்ட உயிரணுக்களை அடிப்படையாகக் கொண்டு தடுப்பூசிகளை உருவாக்கும் அறிவியலாளர்களுக்கும், இது குறித்து தங்கள் குரலை எழுப்ப முடியாமல் இருக்கும்  பொதுமக்களுக்கும், தீச்செயல் குறித்த பொறுப்புணர்வுகள் வேறுபட்டவை என்பதை சுட்டிக்காட்டியுள்ள இத்திருப்பேராயம், நன்னெறி சார்ந்த முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் வேறு இல்லாத நிலையிலும், எத்தகைய மருந்தை பெறுவது என்பதில் முடிவெடுக்க அதிகாரம் இல்லா  நிலையிலும், தற்போதைய மருந்தைப் பெறுவதில் தவறில்லை என்று கூறியுள்ளது.

இந்த தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள நிறுவனங்களின் முடிவுகளில் மக்கள் நேரடியாகப் பங்கேற்காதது, மற்றும், இந்த ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்ட திசுக்களின் உயிர்கள் கருச்சிதைவு செய்யப்பட்டதற்கு மக்கள் இசைவு அளிக்காதது, ஆகியவைகளையும் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, தடுப்பூசிகளை வழங்கும் மருத்துவப் பணியாளர்களுக்கோ, தடுப்பூசிகளைப் பெறுபவர்களுக்கோ மன உறுத்தலைத் தராதவகையில் மருந்துக்களைத் தயாரிக்குமாறு, அரசுகளிடமும், மருந்து நிறுவனங்களிடமும் விண்ணப்பிப்பதாகவும் கூறுகிறது.

தடுப்பூசி என்பது, தனி மனிதர்களின் நலனைக்காப்பது மட்டும் சார்ந்தது அல்ல, இதில் பொதுநலனும் அடங்கியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி, நாம் இந்நோயை பெற்று, அதனை பிறருக்கு பரவவிடாமல் இருக்க, இத்தடுப்புசியைப்பெறுவது அத்தியாவசியமாகிறது எனும் நிலையில், மக்களின் நலனைக் காப்பது அனைவரின் கடமை என்ற உணர்வுடன் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு, தடையேதும் இல்லை எனவும் விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏழை நாடுகள், நல ஆதரவு, பொருளாதாரம், மற்றும், சமுதாய நிலைகளில் பாகுபாட்டுடன் அநீதியாக தொடர்ந்து வாழ்வதற்கு வழிசெய்யப்படாதவகையில், இத்தடுப்பூசி மருந்துகள் அனைத்து ஏழைநாடுகளுக்கும் கிடைக்க மருந்து நிறுவனங்களும், அரசுகளும், அனைத்துலக நிறுவனங்களும் வழிவகைச் செய்யவேண்டியதன் நன்னெறி சார்ந்த கடமையையும் தன் அறிக்கையில் இறுதியாக வலியுறுத்தியுள்ளது, திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டு பேராயம்.

21 December 2020, 15:22