தேடுதல்

பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் 

சமய சுதந்திரம், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட...

மதத் தீவிரவாத நடவடிக்கைகள், சட்டத்தின் அனைத்துவிதமான வழிகளால் நிறுத்தப்படவேண்டும் - OSCE அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் பேராயர் காலகர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வழிபாட்டுத் தலங்கள் உட்பட, சமய சுதந்திரம், தனிப்பட்டவரின் மதநம்பிக்கை ஆகியவை பாதுகாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், OSCE எனப்படும், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் வலியுறுத்தினார்.

OSCE அமைப்பின் அமைச்சர்கள் அவை, இணையம் வழியாக நடத்திய, 27வது கூட்டத்தில், டிசம்பர் 3, இவ்வியாழனன்று உரையாற்றிய, திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்லறைத்தோட்டங்கள், மதம் சார்ந்த இடங்கள் போன்றவற்றின் மீதும், மத நம்பிக்கையாளர்கள் மீதும்  நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்று கவலை தெரிவித்தார்.

இவற்றுக்கு எதிராக இடம்பெறும் சகிப்பற்றதன்மை நிறைந்த போராட்டங்களும், வெறுப்புக் குற்றங்களும், OSCE அமைப்பைச் சார்ந்த பகுதிகளில் மட்டுமல்லாமல், அவற்றுக்கு வெளியேயும் இடம்பெறுவது அதிகரித்து வருகின்றன என்றும், பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.

மத நம்பிக்கையாளர்களை வெறுக்கும் முறையில், அவர்கள் வழிபாட்டுத் தலங்களில் இறைவேண்டலுக்காகக் கூடியிருக்கும் நேரங்களில், இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என்றும், இவை, அமைதியான சூழலுக்கு ஊறுவிளைவிக்கின்றன என்றும், பேராயர் காலகர் அவர்கள் தெரிவித்தார்.

இத்தகைய வன்முறை நடவடிக்கைகளில் பல, மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுவது மிகுந்த கவலையைத் தருகின்றது என்றுரைத்த பேராயர் காலகர் அவர்கள், வன்முறை, மதத்திலிருந்து தளிர்விடுவதில்லை, மாறாக, அது, மதத்தின் பெயரால் வழங்கப்படும் தவறான விளக்கங்கள் மற்றும், கருத்தியல்களிலிருந்தே இடம்பெறுகின்றன என்று கூறினார்.

மதத் தீவிரவாத நடவடிக்கைகள், சட்டத்தின் அனைத்துவிதமான வழிகளால் நிறுத்தப்படவேண்டும் என்று, OSCE அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் கேட்டுக்கொண்ட பேராயர் காலகர் அவர்கள், தற்போதைய கொள்ளைநோய், தனிமனிதருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் கடுமையான சோதனையாக உள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2020, 14:27