தேடுதல்

Vatican News
எபிரேய மொழியில் துவக்கப்பட்டுள்ள வத்திக்கான் செய்திகள் முகப்பு பக்கம் எபிரேய மொழியில் துவக்கப்பட்டுள்ள வத்திக்கான் செய்திகள் முகப்பு பக்கம் 

'வத்திக்கான் செய்திகள்' பிரிவில் எபிரேய மொழியிலும் செய்திகள்

யூத சமுதாயத்திடம் நெருங்கிய நட்புணர்வைக் கொண்டிருக்கும் வத்திக்கானின் அண்மைக்கால முயற்சிகளின் ஒருபகுதியாக, எபிரேய மொழி செய்திப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தன் இணையதளப் பக்கத்தில் இதுவரை 35 மொழிகளில் செய்திகளை வழங்கிவந்த, 'வத்திக்கான் செய்திகள்' பிரிவு, இவ்வியாழன் முதல் எபிரேய மொழியிலும்  செய்திகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுவரை 35 மொழிகளில் செய்திகளை வழங்கி வந்த வத்திக்கான் செய்திப்பிரிவு, டிசம்பர் 17ம் தேதி, இவ்வியாழன் முதல், எபிரேய மொழி செய்திகளையும் வழங்கத் துவங்கியதையடுத்து, நற்செய்தியையும், சான்றுபகர்தலையும், திருஅவை நடவடிக்கைகளையும் எடுத்துரைக்கும் பணிகளை விரிவாக்கியுள்ளது.

வத்திக்கான் இணையதள செய்தி பிரிவில் 36வது மொழியாக எபிரேயமும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்ட, எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள், விவிலிய நூல்களின் மொழிகளுள் ஒன்றாகவும், கிறிஸ்தவ வரலாற்றில் முக்கிய மொழிகளான கிரேக்கம், அரமேயிக் ஆகியவற்றுடன், முதன்மைபெற்றதாகவும் விளங்கும் எபிரேய மொழியில் வத்திக்கான் செய்திகள் இடம்பெற உள்ளது சிறப்பு வாய்ந்தது, என்று கூறினார்.

உலகை முன்னேற்றுவதில் தன் பங்களிப்பை வழங்கிவரும் யூத சமுதாயத்திடம் நெருங்கிய நட்புணர்வைக் கொண்டிருக்கும் வத்திக்கானின் அண்மைக்கால முயற்சிகளின் ஒருபகுதியாக, இந்த எபிரேய மொழி செய்திப்பிரிவு உள்ளது என மேலும் கூறினார் பேராயர் Pizzaballa.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள யூத கோவில்களையும், யூத சமுதாய பிரதிநிதிகளையும் திருத்தந்தை அவர்கள் சந்தித்துள்ளது, புனித பூமியில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டது, நாத்சி வதைப்போர் முகாம்களை சந்தித்து செபித்தது, போன்ற யூத உறவு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த எபிரேய மொழி செய்தி பிரிவு துவக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார் முதுபெரும் தந்தையான பேராயர் Pizzaballa.

மத்திய கிழக்கு நாடுகளின் நிலைகள்  குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட உலக ஆயர்கள் மாமன்றத்தின் சிறப்பு அவை காலத்தில், வத்திக்கான் வானொலி இணையதளப் பக்கத்தில் துவக்கப்பட்ட எபிரேய மொழிப்பிரிவு, 2017ம் ஆண்டு டிசம்பர் வரை நீடித்தது. தற்போது, வத்திக்கான் செய்தி பிரிவின் இணையதளப் பக்கத்தில் டிசம்பர் 17, இவ்வியாழன் முதல், எபிரேய மொழிப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

17 December 2020, 15:17