தேடுதல்

Vatican News
கர்தினால் பீட்டர் டர்க்சன் கர்தினால் பீட்டர் டர்க்சன்  

எல்லா நிலைகளிலும் நம் இலக்குகள் பறைசாட்டப்பட

இப்பூமிக்கோளத்தின் வெப்ப அளவை, 2030ம் ஆண்டுக்குள், 1.5 செல்சியுஸ் டிகிரியாக குறைக்க விரும்பினால், அதற்கு ஆர்வத்துடன் மேற்கொள்ளும் உடனடி செயல்திட்டங்கள் அவசியம் - கர்தினால் டர்க்சன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 12, இச்சனிக்கிழமையன்று, "உயர்மட்ட அளவில் சுற்றுச்சூழல் இலக்கு மெய்நிகர் உச்சிமாநாடு" என்ற தலைப்பில், பாரிஸ் மாநகரில் நடைபெற்ற கணணிவழி பன்னாட்டு கூட்டத்திற்கு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

தற்போது நாம் எதிர்கொள்ளும் பெருந்தொற்று நெருக்கடி, செயலற்று இருப்பதற்கு ஒரு சாக்குபோக்காக கருதப்படக்கூடாது, மாறாக, சிறந்ததோர் உலகை உருவாக்குவதற்கு கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாக அது நோக்கப்படவேண்டும் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று அமைப்பு, அந்த நோய் முடிவுற்றபின், வருங்காலத்தைத் தயாரிப்பதற்கு நமது சக்திகளை ஒன்றிணைக்கவேண்டும் மற்றும், வருங்காலம் குறித்து கனவு காணவேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றது என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறியுள்ளார்.

இப்பூமிக்கோளத்தின் வெப்ப அளவை, 2030ம் ஆண்டுக்குள், 1.5 செல்சியுஸ் டிகிரியாக குறைக்க விரும்பினால், அதற்கு ஆர்வத்துடன் மேற்கொள்ளப்படும் உடனடி செயல்திட்டங்கள் அவசியம் என்றும், அதற்கு பாரிஸ் ஒப்பந்தம் இன்றியமையாதது என்றும், அதை நிறைவேற்றுவது கடினமாக இருந்தாலும், குறிப்பிடத்தக்க மாற்றம் இன்றி, மாற்றம் வெளிப்படாது என்றும், கூறியுள்ளார், கர்தினால் டர்க்சன்.

உலகின் அரசியல் தலைவர்கள் அனைவரும், தங்களின் உண்மையான அழைப்பிற்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்ற கேள்வியை, அவர்களிடம் கேட்பதாகத் தெரிவித்துள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், மிக வறியோர் மற்றும், விளிம்புநிலையில் உள்ளோரை ஒதுக்காமல், அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொதுவான நலன்களை எவ்வாறு உறுதி செய்வீர்கள் என்றும், அரசியல் தலைவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.   

அரசுகள், வருங்காலத்தை மீட்டெடுப்பதற்கு, தங்களின் நிதியை எவ்வாறு செலவழிக்கத் திட்டமிட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பியுள்ள கர்தினால், அத்திட்டங்கள், வருங்காலத் தலைமுறைகளை அன்புகூர்வதாகவும், மதிப்பதாகவும் அமையவேண்டும் என்றும், சமத்துவம் இன்றி, நீடித்த நிலையான வளர்ச்சி கிடையாது என்றும் கூறியுள்ளார்.

நம் சிந்தனைகள், இறைவேண்டல்கள், அரசியல் திட்டங்கள், ஆகியவற்றில், கடும் வறுமையில் வாழ்வோர் மையத்தில் வைக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், முக்கியமான 2021ம் ஆண்டை நாம் நெருங்கிவரும்வேளையில், நாம் அனைவரும் ஒரே மனிதக் குடும்பம் என்பதையும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கு நாம் ஒருவர் ஒருவரை மட்டுமே சார்ந்துள்ளோம் என்பதையும் நினைவில் இருத்துவோம் என்று கூறியுள்ளார்.

இப்பூமியின் அழுகுரல் மற்றும், வறியோரின் அழுகுரல் பற்றிக் கூறும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறைவா உமக்கே புகழ் திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு மற்றும், சுற்றுச்சூழல் குறித்த பாரிஸ் உடன்பாடு உருவாக்கப்பட்ட ஐந்தாம் ஆண்டு நிறைவில் இக்கூட்டம் நடைபெறுகின்றது என்றும், கர்தினாலின் செய்தி கூறுகிறது.

12 December 2020, 15:19