தேடுதல்

Vatican News
நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

ஆயருக்கும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கும் இடையேயுள்ள தொடர்பு

ஆயர்கள், கத்தோலிக்கர் அல்லாத சபைகளின் தலைவர்கள் மற்றும், உறுப்பினர்களுடன் நட்புறவை பேணி வளர்க்கும்போது, முற்சார்பு எண்ணங்கள் களையப்படும், நல்ல உறவுகளை அமைப்பதற்கு உதவும் - கர்தினால் தாக்லே

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆயர்களின் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக்கு வழிகாட்டும் இந்த ஏட்டை, டிசம்பர் 04, இவ்வெள்ளியன்று, மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், ஆயருக்கும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எடுத்துரைத்தார்.

ஓர் ஆயரின் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணி, திருஅவையின் தனித்துவம் மற்றும், அதன் மறைப்பணிக்குத் தொண்டாற்றுவதாக, இந்த கையேட்டின் பல பிரிவுகளில் குறிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், நற்செய்தி அறிவிப்புப்பணியே, இயேசுவை அறிவிப்பதாகும், நற்செய்தியாகிய இயேசுவை, இறைவார்த்தை, இறைவேண்டல், சான்று வாழ்வு, பிறரன்புப் பணிகள் போன்றவற்றால் அறிவிக்கவேண்டும் என்றும் கூறினார்.

கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருக்கின்ற இடங்களிலும், திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்கள், திருஅவையிலிருந்து விலகிச்செல்லும் இடங்களிலும், கிறிஸ்தவ சபைகளுக்கிடையே பகைமை வெளிப்படுகையில், அது நற்செய்தி அறிவிப்புப்பணிக்குத் தடங்கலாக உள்ளது என்றும், கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்தார்.

பல நேரங்களில், கிறிஸ்தவ சபைகளுடன் கலந்துரையாடுவதைவிட, கத்தோலிக்கர் அல்லாதவருடன் உரையாடுவது எளிதாக உள்ளது என்றும், செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்ட கர்தினால் தாக்லே அவர்கள், ஓர் ஆயர், கிறிஸ்தவ ஒன்றிப்புப்பணியில் ஈடுபடுவதற்கு, அவர், உரையாடல் மனிதராக இருக்கவேண்டும் என்று, அந்த கையேடு குறிப்பிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

புதிதாக நியமனம் செய்யப்படும் ஆயர்கள், மற்றும், ஆயர்களைத் தொடர்ந்து உருவாக்குவதில், வேறுபாடுகளையும், மோதல்களையும் எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும், கடந்தகால நினைவுகளைக் குணப்படுத்தி, மன்னிப்பை எவ்வாறு ஊக்குவிப்பது என்பது பற்றியும், கருத்தரங்குகள் மற்றும், பயிலரங்கங்கள் நடத்தப்படவேண்டும் என்று, இந்த கையேடு பரிந்துரைக்கின்றது என்றும், கர்தினால் தாக்லே அவர்கள் குறிப்பிட்டார்.

ஆயர்கள், கத்தோலிக்கர் அல்லாத சபைகளின் தலைவர்கள் மற்றும், உறுப்பினர்களுடன் நட்புறவை பேணி வளர்க்கும்போது, முற்சார்பு எண்ணங்கள் களையப்படும், மற்றும், கடந்தகாலக் காயங்களைக் குணப்படுத்தி, நல்ல உறவுகளை அமைப்பதற்கு அது உதவும் என்றும், கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக், ஆயர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் Marc Ouellet, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி ஆகியோர், கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணியில் ஆயர்களுக்கு வழிகாட்டும் இந்த ஏட்டை, மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டனர்.

04 December 2020, 14:59