தேடுதல்

தீபாவளி திருநாளுக்கு தயாரிப்பு தீபாவளி திருநாளுக்கு தயாரிப்பு   (AFP or licensors)

நேர்மறையான எண்ணங்கள் மீண்டும் புத்துயிர்பெற...

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்திலும், அந்நோய் முடிவுற்றபின்னும், நேர்மறையான எண்ணங்களும், நம்பிக்கையும், உலகில் மீண்டும் புத்துயிர்பெறச் செய்வதற்கு, கிறிஸ்தவர்களும், இந்துக்களும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்திலும், அந்நோய் முடிவுற்றபின்னும், நேர்மறையான எண்ணங்களும், நம்பிக்கையும் உலகில் மீண்டும் புத்துயிர்பெறச் செய்வதற்கு, கிறிஸ்தவர்களும், இந்துக்களும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறு, திருப்பீட பல்சமய உரையாடல் அவை கேட்டுக்கொண்டுள்ளது.

இம்மாதம் 14ம் தேதி சிறப்பிக்கப்படும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து இந்துமத நண்பர்களுக்கு, நவம்பர் 06, இவ்வெள்ளியன்று, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

தற்போதைய கொள்ளைநோய் உருவாக்கியுள்ள இன்னல்கள் மத்தியில், அச்சம், குழப்பம் மற்றும், கவலை ஆகிய அனைத்தும் அகன்று, நட்பு, பரந்தமனம், மற்றும், ஒருமைப்பாடு ஆகியவற்றின் ஒளியால், இதயங்களும் மனங்களும் நிரப்பப்படட்டும் என்ற தன் நல்வாழ்த்துக்களையும், அத்திருப்பீட அவை தெரிவித்துள்ளது.

இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பல்வேறு நிலைகளில் உரையாடலையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவித்து வளர்க்கும் நோக்கத்தில், இத்தகைய செய்தி, இவ்வாண்டில் 25வது முறையாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் அத்திருப்பீட அவை, மனித சமுதாயம் அனைத்தின் நன்மைக்காக, நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றுவதை ஊக்குவிப்பதற்கும், இத்தகைய செய்தி தூண்டுதலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.    

கோவிட்-19 கொள்ளைநோய், சமுதாய, பொருளாதார, அரசியல் மற்றும், ஆன்மீகம் ஆகிய துறைகளில் உருவாக்கியுள்ள எண்ணற்ற தடைகளுக்கு மத்தியிலும், மக்கள் வருங்காலத்தை உடன்பாட்டு உணர்வு மற்றும், நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கு, இந்துக்களும் கிறிஸ்தவர்களும் துணிந்து செயல்படுமாறு இத்திருப்பீட அவை கேட்டுக்கொண்டுள்ளது.

நம்மைப் படைத்துக் காத்து வருபவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற உறுதிப்பாட்டில் நம்பிக்கை வைத்து, நம் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அச்செய்தி, கொரோனா கொள்ளைநோய், நம் சிந்தனையிலும் வாழ்வுமுறையிலும் எண்ணற்ற நல்மாற்றங்களைக் கொணர்ந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

நம் மத மரபுகள், போதனைகள், விழுமியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்துக்களும் கிறிஸ்தவர்களும், நன்மனம்கொண்ட எல்லாரோடும் இணைந்து, நம் சமுதாயங்களின் இதயங்களில், தற்போதைய இன்னலான நாள்களில் மட்டுமல்லாமல், நம்முன் உள்ள வருங்காலத்திலும், நேர்மறைச்சிந்தனை மற்றும், நம்பிக்கை கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பவும், அனைத்து மனித சமுதாயத்தின் நன்மைக்காக தங்களையே அர்ப்பணிக்கவும்வேண்டும் என்று, பல்சமய உரையாடல் திருப்பீட அவை அழைப்பு விடுத்துள்ளது. 

பல்சமய உரையாடல் திருப்பீட அவை வெளியிட்டுள்ள இந்த தீபாவளிச் செய்தியில், அந்த அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்களும், அதன் செயலர் பேரருள்திரு Indunil Kodithuwakku Janakaratne Kankanamalag அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

06 November 2020, 15:34