தேடுதல்

OSCE கூட்டத்தில் உரையாற்றும் அருள்பணி Janusz Urbańczyk OSCE கூட்டத்தில் உரையாற்றும் அருள்பணி Janusz Urbańczyk 

அரசுகளின் தடை உத்தரவுகள், மத நடவடிக்கைகளை பாதித்துள்ளன

மதத்திற்கு எதிராக வெறுப்பை வளர்க்கும் கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில், வெளியிடப்படுவதைத் தடுக்க அரசுகள் இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்கவேண்டும் - அருள்பணி Urbańczyk

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

COVID-19 கொள்ளைநோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அரசுகள் விதித்துவரும் தடை உத்தரவுகள், மதம், கல்வி, மற்றும் பிறரன்புப்பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை பெருமளவு பாதித்துள்ளன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐரோப்பிய அவை ஒன்றில் கூறினார்.

ஐரோப்பாவில் பாதுகாப்பையும், கூட்டுறவையும் வளர்க்கும் நிறுவனமான OSCE ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், "மதம் மற்றும் மத நம்பிக்கையின் சுதந்திரம்" என்ற தலைப்பில், நவம்பர் 9,10 ஆகிய இரு நாள்கள் வியன்னாவில் நடபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

கொள்ளைநோயைத் தடுப்பது அல்லது ஒழிப்பது என்பது, வெறும் அறிவியல் சார்ந்த விடயம் மட்டுமல்ல, அச்செயலில் பல்வேறு நன்னெறி விழுமியங்களும், மக்களின் ஒற்றுமை சார்ந்த விடயங்களும் உள்ளன என்பதை, அருள்பணி Urbańczyk அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

மதத்திற்கு எதிராக வெறுப்பை வளர்க்கும் கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில், வெளியிடப்படுவதைத் தடுக்க அரசுகள் இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்த அருள்பணி Urbańczyk அவர்கள், கருத்துச் சுதந்திரம் என்ற கண்ணோட்டத்தில் வெறுப்பை வெளியிடும் போக்கு தற்போது கூடிவருவது குறித்து கவலையை வெளியிட்டார்.

சமயங்களுக்கிடையே உரையாடலையும், சந்திக்கும் கலாச்சாரத்தையும் வளர்க்க சமய நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை அரசுகள் தடை செய்வதற்குப் பதில், இத்தகைய முயற்சிகளை ஊக்குவிக்க முன்வரவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் தன் உரையில் முன் வைத்தார், அருள்பணி Urbańczyk.

11 November 2020, 14:55