தேடுதல்

Vatican News
புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால்களில் ஒருவரான ஆயர் Gambetti  புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால்களில் ஒருவரான ஆயர் Gambetti   (ANSA)

கர்தினால் பணி, திருஅவை வாழ்வில் மூழ்குவதற்கு ஓர் அழைப்பு

55 வயது நிறைந்த ஆயர் Gambetti அவர்கள், திருஅவையில் நியமிக்கப்பட்டுள்ள கர்தினால்களில் மிகக் குறைந்த வயதுள்ளவர்களில் மூன்றாம் இடத்தை வகிக்கிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆயராகவும், கர்தினாலாகவும் பொறுப்பேற்பது, ஆண்டவரை நம்பி, ஆழமான கடலில் குதிப்பது போன்ற உணர்வைத் தருகிறது என்று, புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால்களில் ஒருவர், வத்திக்கான் செய்திக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் பசிலிக்காவின் பொறுப்பாளராகப் பணியாற்றிவந்த Mauro Gambetti அவர்கள், நவம்பர் 28 வருகிற சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து கர்தினால் பொறுப்பைப் பெறுவதையொட்டி, வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், இந்த பொறுப்பு, திருஅவை வாழ்வில் மூழ்குவதற்கு தனக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று எடுத்துரைத்தார்.

1965ம் ஆண்டு, இத்தாலியின் Bolognaவில் பிறந்து, பொறியியல் பட்டம் பெற்றபின், தன் 26வது வயதில் பிரான்சிஸ்கன் துறவியாக தன் வாழ்வைத் துவக்கிய Gambetti அவர்கள், நவம்பர் 22ம் தேதி, கடந்த ஞாயிறன்று, புனித பிரான்சிஸ் பசிலிக்காவில், கர்தினால் Agostino Vallini அவர்களால், ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

ஆயர், கர்தினால் ஆகிய பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டாலும், ஆழ்மனதில் தான் ஒரு பிரான்சிஸ்கன் சகோதரர் என்பதையும், தன் வாழ்வு தொடர்ந்து பிரான்சிஸ்கன் எளிமையைப் பின்பற்றும் என்பதையும் Gambetti அவர்கள், கூறினார்.

55 வயது நிறைந்த ஆயர் Gambetti அவர்கள், திருஅவையில் நியமிக்கப்பட்டுள்ள கர்தினால்களில் மிகக் குறைந்த வயதுள்ளவர்களில் மூன்றாம் இடத்தை வகிக்கிறார். 53 வயது நிறைந்த மத்திய ஆப்ரிக்க குடியரசின் கர்தினால் Dieudonné Nzapalainga அவர்களும், 54 வயது நிறைந்த போர்த்துகல் கர்தினால் José Tolentino Mendonca அவர்களும், ஆயர் Gambetti அவர்களைவிட வயதில் குறைந்தவர்கள்.

மேலும், நவம்பர் 28ம் தேதி கர்தினால் பொறுப்பு வழங்கப்படவிருக்கும் 13 பேரில், ஆயர் Gambetti அவர்களுடன், சிலே நாட்டைச் சேர்ந்த பேராயர் Celestino Aós Braco, பாப்பிறை இல்லத்தின் மறையுரையாளராகப் பணியாற்றும் 86 வயது நிறைந்த அருள்பணி Raniero Cantalamessa ஆகியோர் உட்பட, மூவர், பிரான்சிஸ்கன் துறவுசபையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (CNA)

25 November 2020, 14:37