தேடுதல்

ஈக்வதோர் நாட்டின் 86 வயது கர்தினால் Raúl Eduardo Vela Chiriboga ஈக்வதோர் நாட்டின் 86 வயது கர்தினால் Raúl Eduardo Vela Chiriboga 

இரு கர்தினால்கள் இறைபதம் அடைந்தனர்

தற்போது உலகின் 87 நாடுகளைச் சேர்ந்த 216 கர்தினால்கள் உள்ளனர், இவர்களில் 119 பேர் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி உடையவர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈக்வதோர் நாட்டின் 86 வயது கர்தினால் Raúl Eduardo Vela Chiriboga அவர்கள், இஞ்ஞாயிறன்றும், போலந்து நாட்டின் 97 வயது கர்தினால் Henryk Roman Gulbinowicz அவர்கள் இத்திங்களன்றும், இறைபதம் சேர்ந்ததையடுத்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 216 ஆக குறைந்துள்ளது.

1934ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி ஈக்குவதோர் நாட்டில் பிறந்த கர்தினால் Vela Chiriboga அவர்கள், அந்நாட்டிலேயே பணியாற்றி, 2010ம் ஆண்டு Quito நகர் பேராயராக பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அதே ஆண்டு நவம்பர் மாதம் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

இத்திங்களன்று இறைபதம் சேர்ந்த கர்தினால் Gulbinowicz அவர்கள், 1923ம் ஆண்டு பிறந்து, லித்துவேனியாவில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு, 1976ம் ஆண்டு போலந்தின் Wrocław நகர் பேராயராக நியமிக்கப்பட்டு, 1985ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 2004ம் ஆண்டு அப்பெருமறைமாவட்ட பணிகளிலிருந்து ஒய்வு பெற்ற கர்தினால் Gulbinowicz அவர்கள், நவம்பர் 16, இத்திங்களன்று இறைபதம் சேர்ந்தார்.

ஈக்குவதோர் நாட்டின் கர்தினால் Vela Chiriboga அவர்கள், இறைபதம் அடைந்ததையடுத்து, அந்நாட்டில் வேறு யாரும் கர்தினால் பொறுப்பில் இல்லை என்பதும், தற்போதுள்ள கர்தினால்கள், 87 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், குறிப்பிடத்தக்கன.

தற்போதுள்ள 216 கர்தினால்களில், 119 பேர், 80 வயதிற்குட்பட்டவர்கள், 97 பேர் 80 வயதைத் தாண்டியவர்கள். 80 வயதிற்குட்பட்ட கர்தினால்களே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

16 November 2020, 14:39