தேடுதல்

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” கணணி வழி கருத்தரங்கு “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” கணணி வழி கருத்தரங்கு  (ANSA)

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்”: ஒருமைப்பாட்டை உருவாக்கியுள்ளது

கோவிட்-19 கொள்ளைநோய், உச்சத்தில் இருப்பவர்களுக்கு மிகுந்த இலாபங்களைக் கொணர்ந்துள்ளது. உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினர், உலகின் செல்வத்தில் 99 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் ஓர் உலகை நாம் அமைத்துள்ளோம் – முகமது யூனுஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற தலைப்பில், இளம் பொருளாதார வல்லுனர்கள், மற்றும், தொழில்முனைவோருக்கென, இத்தாலியின் அசிசி நகரில் நடைபெற்ற, பன்னாட்டு கணணி வழி கருத்தரங்கில், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, பொதுநலனுக்கு உதவக்கூடிய, உலகளாவிய பொருளாதாரம் அமைக்கப்படுவதற்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நவம்பர் 19, இவ்வியாழனன்று தொடங்கிய இந்த மூன்று நாள் கருத்தரங்கில், நாற்பதுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த, 35 வயதுக்குட்பட்ட, இரண்டாயிரத்திற்கும் அதிகமான, இளம் பொருளாதார வல்லுனர்களும், தொழில்முனைவோரும் கலந்துகொண்டனர்.

இந்த கருத்தரங்கின் இரண்டாவது நாளாகிய நவம்பர் 21, இவ்வெள்ளியன்று, நிதி, பொருளாதாரம், சமுதாயவியல், சூழலியல் ஆகியவை எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படும் இந்த மெய்நிகர் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வுகளை, 48 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்றும், உலகளாவிய பொருளாதாரத்தை எந்தெந்த வழிகளில் வளர்க்கலாம் என்பது குறித்து, இளம் பொருளாதார வல்லுனர்கள், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வழங்கினர் என்றும் கூறப்பட்டுள்ளது.

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் முதல் அமர்வில், உலகளாவிய பொருளாதாரத்தின் பல்வேறு சமுதாயக் கூறுகள் பற்றியும், அசிசி நகரின் புனித பிரான்சிசின் வழியில், அவற்றை எவ்வாறு வளர்ப்பது என்பது பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாவது நாள் நிகழ்வில் உரையாற்றிய, பங்களாதேஷ் நாட்டின் பொருளாதார வல்லுனர் மற்றும், 2006ம் ஆண்டு, நொபெல் அமைதி விருதைப் பெற்றுள்ள தொழில்முனைவோரான, முகமது யூனுஸ் அவர்கள், வருவாய் குறைவாக உள்ள தனிநபர்கள், எவ்வாறு சிறுதொழில் தொடங்குவதற்கு கடன் உதவிபெறலாம் என்பது பற்றிய கருத்துக்களை வழங்கினார்.

கோவிட்-19 கொள்ளைநோய், பெருந்தொழில்முனைவோருக்கு, மிகுந்த இலாபங்களைக் கொணர்ந்துள்ளது என்றும், உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினர், உலகின் செல்வத்தில் 99 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் ஓர் உலகை நாம் அமைத்துள்ளோம் என்றும் யூனுஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

நவம்பர் 21, இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த இந்த கருத்தரங்கின் முத்தாய்ப்பாக, இந்நாள் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிச் செய்தி ஒன்றையும் வழங்கியுள்ளார்.

21 November 2020, 14:44