தேடுதல்

கடல்சார் பணியாளர்களில் ஒருவர் கடல்சார் பணியாளர்களில் ஒருவர்  (ANSA)

மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களின் இன்னல்கள் களையப்பட...

பெருமளவான மீனவர்களுக்கு, அடிப்படை சமுதாயப் பாதுகாப்பு புறக்கணிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கப்பல்களில் கொத்தடிமைகளாக வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுகின்றனர் - கர்தினால் டர்க்சன்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் கடலில் பணியாற்றுவோர் அனுபவிக்கும் கடின வாழ்வும், இன்னல்களும் களையப்பட, தேசிய அரசுகளும், பன்னாட்டு அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நவம்பர் 21 இச்சனிக்கிழமையன்று, மீனவர் உலக நாள் (World Fisheries Day) சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதியிலிருந்து, லிபியாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 மீனவர்கள், வெளியுலகத் தொடர்பின்றி வைக்கப்பட்டுள்ளது குறித்து கவலையை வெளியிட்டுள்ளார்.

அவர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை அறிவதற்கும், அவர்களோடு உரையாடுவதற்கும், அவர்களின் குடும்பத்தினர், கவலையோடு காத்திருக்கின்றனர் என்பதைக் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், தங்கள் குடும்பங்களோடு ஒன்றுசேரக் காத்திருக்கும் இந்த மீனவர்களின் துன்பங்கள் அகற்றப்பட, மனிதாபிமான அடிப்படையில், அரசுகளுக்கு அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மீன்பிடித்தல், மீன்களைப் பதப்படுத்தல் மற்றும், மீன் விற்பனை ஆகியவை, கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தின் விதிமுறைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், புலம்பெயர்ந்த மீனவர்களுக்கு, வேலைவாய்ப்பு புறக்கணிக்கப்படுகின்றது என்றும், வருவாய் இன்றி அவர்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற கஷ்டப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

உலக அளவில், பல்வேறு காரணங்களுக்காக, பெருமளவான மீனவர்களுக்கு, அடிப்படை சமுதாயப் பாதுகாப்பு புறக்கணிக்கப்படுகின்றது என்றும், இவர்கள் பிறரன்பு நிறுவனங்களின் உதவியால் வாழவேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கப்பல்களில் கொத்தடிமைகளாக வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுகின்றனர் என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

ஏறத்தாழ 5 கோடியே 95 இலட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் மீனவத்துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில், மீனவர் உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது.

20 November 2020, 14:28