தேடுதல்

“ஒருபோதும் வேண்டாம்” இணையவழி கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் பரோலின் “ஒருபோதும் வேண்டாம்” இணையவழி கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் பரோலின் 

யூதமத விரோதப் போக்கை ஒழிக்க பல்சமய உரையாடல்

மனிதர் அனைவரும் கடவுளின் குழந்தைகளாக நோக்கப்படவேண்டும் என்ற உண்மையின் அடிப்படையில், உடன்பிறந்த உணர்வு கட்டியெழுப்பப்பட வேண்டும் - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 19, இவ்வியாழன் மாலையில், “ஒருபோதும் வேண்டாம்: உலக அளவில் அதிகரித்துவரும் யூதமத விரோதப் போக்கிற்கு எதிராகச் செயல்படுதல்” என்ற தலைப்பில், திருப்பீடத்திற்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதரகம் நடத்திய இணையவழி கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அதிகரித்துவரும் யூதமத விரோதப் போக்கை ஒழிப்பதற்கு, பல்சமய உரையாடல் மிகவும் அவசியம் என்று கூறினார்.

யூதமத விரோதப் போக்கை ஒழிக்கும் நடவடிக்கைகள் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முன்னாள் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ கஸ்பாரி (Pietro Gasparri) அவர்கள், 1916ம் ஆண்டில் எழுதிய மடலிலும் வழங்கியுள்ள பரிந்துரைகளை, கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.

யூதமத விரோதப் போக்கு, எந்த வடிவத்திலும் இடம்பெற்றாலும், அது கிறிஸ்தவத்திற்கு முரணானது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார் என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தனது திருமடலில், திருத்தந்தை, யூதமத விரோதப்போக்கு பற்றிய சிந்தனைகளை வழங்கியுள்ளார் என்றும் கூறினார்.

இனவெறி, புறக்கணிப்பு, வரலாறு பற்றிய உணர்வற்றநிலை போன்றவை, மக்களாட்சி மற்றும், சுதந்திரம் ஆகிய அடிப்படை கூறுகளுக்கு முரணாக உள்ளன என்பதையும், அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தனது திருமடலில் திருத்தந்தை கூறியுள்ளார், என்றார் கர்தினால் பரோலின்.

யூதமத விரோதப் போக்கை ஒழிப்பதற்கு, பல்சமய உரையாடல் மிகவும் அவசியம் என்றும், மனிதர் அனைவரும் கடவுளின் குழந்தைகளாக நோக்கப்படவேண்டும் என்ற உண்மையின் அடிப்படையில், உடன்பிறந்த உணர்வு கட்டியெழுப்பப்படவேண்டும் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

20 November 2020, 14:35