தேடுதல்

பேராயர் பால் ரிச்சர்டு காலகர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்  

திருப்பீட தூதரகப் பணிகள் அமைதியை ஊக்குவிக்க

திருப்பீடத் தூதரகப் பணிகள், இக்காலக்கட்டத்தில் கட்டுக்கடங்காமல் இடம்பெறும் புறக்கணிப்பு முறைகளை உடைத்து, மக்களுக்கு இடையே உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் நோக்கத்தை கொண்டிருக்கின்றன - பேராயர் காலகர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

1980ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி, பெரு நாட்டுத் தலைநகர் லீமாவில், அந்நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் கையெழுத்திடப்பட்டதன் நாற்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நவம்பர் 06, இவ்வெள்ளியன்று உரையாற்றிய, பன்னாட்டு திருப்பீட வெளியுறவுத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், திருப்பீடத்தின் தூதரகப் பணிகளின் அர்த்தம் மற்றும், அவற்றின் கூறுகள் பற்றி எடுத்துரைத்தார்.

நாடுகளுக்கு இடையே அமைதியை ஊக்குவிப்பதையே, திருப்பீடம், தன் தூதரகப் பணிகளின் மையமாக வைத்துள்ளது என்றும், அது கடினமான பாதையாக இருந்தாலும், இயலக்கூடியதே என்றுரைத்த பேராயர் காலகர் அவர்கள், இக்காலக்கட்டத்தில் கட்டுக்கடங்காமல் இடம்பெறும் புறக்கணிப்பு முறைகளை உடைத்து, மக்களுக்கு இடையே உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் நோக்கத்தை, அந்தப் பாதை கொண்டிருக்கின்றது என்றும் கூறினார்.

தூதரக நடவடிக்கை என்பது, நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிப்பதோடு அல்லது, அவற்றின் நோக்கங்களை மதிப்பீடு செய்வதோடு, அல்லது, அவற்றை மனச்சான்றின் குரலோடு விமர்சிப்பதோடு, அல்லது, வெறுமனே பார்வையாளராக அவற்றை நோக்குவதோடு திருப்தியடைவதில்லை என்றும், பேராயர் காலகர் அவர்கள் குறிப்பிட்டார்.

பல்வேறு நாடுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும், மக்கள் மத்தியில் உடன்பிறந்த உணர்வை வளர்க்கவும், தனிமனிதர் மற்றும், பொது நலனுக்காக, ஒருமைப்பாட்டு அமைப்புகளையும், சட்டவிதிமுறைகளையும் நெறிப்படுத்தவும் திருப்பீடம், தன் தூதரகங்கள் வழியாக முயற்சிக்கின்றது என்றும், பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.

நீதியை அடிப்படையாகக் கொண்ட அமைதிக்கே திருப்பீடம் ஆதரவளிக்கின்றது என்றும், புறக்கணிப்பு யுக்திகளை உடைத்தெறியவும், போர்களைத் தடைசெய்யவும், அதேநேரம், போர் முடிந்தபின்னர் அப்பகுதிகளின் நல்வாழ்வுக்கும் திருப்பீடம் உழைக்கின்றது என்றும், பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.

07 November 2020, 14:58