தேடுதல்

பேராயர் பால் ரிச்சர்டு காலகர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்  

கோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளம் மற்றும், நம் பொதுவான திட்டங்கள் பற்றி மீள்ஆய்வு ஒன்றை மேற்கொள்ளவேண்டியது, உலக சமுதாயத்தின் கடமை - பேராயர் காலகர்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

கொரோனா கொள்ளைநோய் காலத்தில், வறியோர், மற்றும், சமுதாயத்தில் விளிம்புநிலையில் இருப்போர் ஆகியோர் மறக்கப்பட்டுவிடக்கூடாது என்று, பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், நவம்பர் 23, இத்திங்களன்று கேட்டுக்கொண்டார்.

உலகில் நிலவும் பொதுவான பிரச்சனைகளைக் களைவதற்கும், நாடுகளிடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் தேவைப்படும், அறிவியல் ஒத்துழைப்பு குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய பேராயர் காலகர் அவர்கள், வெகு வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் உதவியோடு, தற்போதைய நெருக்கடிகளிலிருந்து விரைவில் வெளிவருவதற்கு முயற்சிக்குமாறு வலியுறுத்தினார்.

இந்த முயற்சியில் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்ட பேராயர் காலகர் அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள பிரச்சனைகளைக் களைவதற்கு, அறிவியலும், மனிதரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.

“உடன்பிறந்த உணர்வு, ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல், மற்றும், கோவிட்-19: தூதரக உறவுகள் மற்றும், அறிவியலின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றிய பேராயர் காலகர் அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோய், மனித சமுதாயம் முழுவதற்கும் ஒரு பரிசோதனையாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

இந்த கொள்ளைநோய், நெருக்கடிநிலையை மிக அதிகமாக உருவாக்கி, எண்ணற்ற சந்தேகங்கள், அச்சங்கள், கவலைகள் மற்றும், பாதுகாப்புகள் நிலைகுலைவு ஆகியவற்றுக்குக் காரணமாகியுள்ளது என்றும், இது, திடீரென நாம் அனைவரும், பலவீனர்கள் என்று நம்மையே கண்டுணர வைத்துள்ளது என்றும், பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.

அறிவியலைவிட மனித வாழ்வு பெரிது என்றும், நாம் முன்பிருந்ததுபோல் இருந்தால், தற்போதைய நெருக்கடியிலிருந்து நம்மால் ஒருபோதும் மீண்டு வரமுடியாது என்றும் உரைத்த பேராயர் காலகர் அவர்கள், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளம் மற்றும், நம் பொதுவான திட்டங்கள் பற்றி மீள்ஆய்வு மேற்கொள்ளவேண்டியது நமது கடமை என்பதையும் நினைவுபடுத்தினார்.

நாம் அனைவரும் விரும்புகின்ற வருங்காலத்தை அமைப்பதற்கு, நாடுகளை ஒன்றிணைக்கவும், மக்களுக்கிடையே பாலங்களை அமைக்கவும் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை நல்ல முறையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்ட பேராயர் காலகர் அவர்கள், இந்நிகழ்வை ஏற்பாடு செய்த, உரோம் அறிவியல் கழகத்திற்கு நன்றியும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2020, 14:26