தேடுதல்

லெஸ்போஸ் தீவில் புலம்பெயர்ந்தோர் லெஸ்போஸ் தீவில் புலம்பெயர்ந்தோர்  (AFP or licensors)

அருள்சகோதரிகளின் கட்டடம் புலம்பெயர்ந்தோருக்காக....

பிசானா சாலையில் அமைந்துள்ள Villa Serena மையத்தில், மனிதாபிமான அமைப்புகள் வழியாக, இத்தாலிக்கு வருகின்ற பெண்கள், பச்சிளம் குழந்தைகளை வைத்துள்ள அன்னையர் மற்றும், நலிவுற்ற குடும்பத்தினர் ஆகியோர் தங்க வைக்கப்படுவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் கத்தானியா இறைபராமரிப்புப் பணியாளர் அருள்சகோதரிகள் சபை, உரோம் நகரிலுள்ள தங்கள் மையத்தை, இத்தாலி நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரைத் தங்க வைப்பதற்கு அளித்துள்ளனர்.

திருத்தந்தையின் சார்பில் தர்மச் செயல்களை ஒருங்கிணைக்கும் கர்தினால் Konrad Krajewski அவர்கள், இது குறித்து, அக்டோபர் 12, இத்திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அருள்சகோதரிகள், உரோம் நகரில், பிசானா சாலையிலுள்ள (Via della Pisana) தங்கள் மையத்தை, எவ்வித கட்டணமும் இன்றி பயன்படுத்துவதற்கு வழங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti)” என்ற தனது புதிய திருமடலில், போர்கள், சித்ரவதைகள், மற்றும், இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றால், தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்குப் போதுமான பாதுகாப்புகள் வழங்கப்படவேண்டும் என்று, பலமுறை அழைப்பு விடுத்துள்ளதற்குப் பதிலளிக்கும் விதமாக, கத்தானியா இறைபராமரிப்புப் பணியாளர் அருள்சகோதரிகள் சபையினர், தங்களின் மையத்தை வழங்கியுள்ளனர் என்று, கர்தினால் Krajewski அவர்கள் கூறியுள்ளார்.

உரோம் நகரின் பிசானா சாலையில் அமைந்துள்ள Villa Serena என்ற இந்த மையத்தில், மனிதாபிமான அமைப்புகள் வழியாக, இத்தாலிக்கு வருகின்ற பெண்கள், பச்சிளம்  குழந்தைகளை வைத்துள்ள அன்னையர் மற்றும், நலிவுற்ற குடும்பத்தினர் ஆகியோர் தங்க வைக்கப்படுவர் என்றும், கர்தினால் Krajewski அவர்கள் கூறியுள்ளார்.

இத்தாலிக்கு வருகின்ற புலம்பெயர்ந்தோரில் ஏறத்தாழ அறுபது பேர், இந்த மையத்தில், முதலில் சில மாதங்கள் தங்கவைக்கப்படுவர் என்றும், பின்னர் அவர்களுக்கு, வேலையும் ஏனைய வசதிகளும் கிடைப்பதற்கு உதவிகள் வழங்கப்படுவர் என்றும், கர்தினாலின் அறிக்கை கூறுகிறது.

Villa Serena மையம், உரோம் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, 2015ம் ஆண்டிலிருந்து, சிரியா, ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள், கிரேக்கம், குறிப்பாக, லெஸ்போஸ் தீவு போன்றவற்றிலிருந்து வருகின்ற புலம்பெயர்ந்தோருக்கு உதவி வருகிறது. இந்த அமைப்பு இதுவரை, பெருமளவான சிறார் உட்பட, 2,600 பேருக்கு உதவியுள்ளது

13 October 2020, 14:59