தேடுதல்

Moneyval அமைப்பின் உறுப்பினர்களை, வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் Moneyval அமைப்பின் உறுப்பினர்களை, வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்  (Vatican Media)

Moneyval அமைப்பு கண்காணிப்பு பணியின் நிறைவு

திருப்பீடத்தின் பல்வேறு துறைகள், Moneyval அமைப்பின் உறுப்பினர்கள் வழங்கியுள்ள நேர்மறை மதிப்பீடுகளாலும், ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளாலும் ஓர் உந்துசக்தியைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவேண்டலை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 14, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்ட ஒரு கருத்தை, தன் டுவிட்டர் செய்தியாகவும் வெளியிட்டுள்ளார்.

"நம் கவலைகளையும் விண்ணப்பங்களையும் இறைவனின் கரங்களில் நம் இறைவேண்டல் வழியே ஒப்படைக்கிறோம். நமக்கு என்ன தேவை என்பதையும், நமக்கு எது நன்மை பயக்கும் என்பதையும் அவர் அறிந்துள்ளார்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், கறுப்புப் பணம், வெள்ளையாக மாற்றப்படுவதையும், அடிப்படைவாத குழுக்களுக்கு நிதி உதவி செய்யப்படுவதையும் தடுப்பதற்கென ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டுள்ள Moneyval அமைப்பு, செப்டம்பர் 30ம் தேதி முதல், அக்டோபர் 13ம் முடிய, வத்திக்கானில் மேற்கொண்ட கண்காணிப்பு பணிகளை, இச்செவ்வாயன்று நிறைவுசெய்தது.

வத்திக்கானில் நடைபெற்ற இந்தக் கண்காணிப்பின் முடிவில், இந்த முயற்சியில், வத்திக்கானின் அனைத்து துறைகளும் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி கூறியதோடு, இந்தக் கண்காணிப்பு, நேர்மறை விளைவுகளை உருவாக்கியுள்ளதென Moneyval அமைப்பின் உறுப்பினர்கள் கூறினர்.

திருப்பீடத்தின் கணக்கு வழக்குகளும், நிதி பரிமாற்றங்களும் தெளிவான, வெளிப்படையான முறையில் நடைபெறவேண்டும் என்ற இலக்கை நோக்கி முயற்சிகளை மேற்கொண்டுள்ள திருப்பீடத்தின் பல்வேறு துறைகள், Moneyval அமைப்பின் உறுப்பினர்கள் வழங்கியுள்ள நேர்மறை மதிப்பீடுகளாலும், ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளாலும் ஓர் உந்துசக்தியைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளன.

செப்டம்பர் 30ம் தேதி முதல், வத்திக்கானில், கண்காணிப்பு பணிகளை மேற்கொண்ட Moneyval அமைப்பின் உறுப்பினர்களை, அக்டோபர் 8ம் தேதி, கடந்த வியாழனன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, திருப்பீடத்திற்கு அவ்வமைப்பினர் ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி கூறினார்.

14 October 2020, 14:48