தேடுதல்

மரண தண்டனைக்கு எதிரான உலக நாள் மரண தண்டனைக்கு எதிரான உலக நாள்  (ANSA)

மரண தண்டனை, உலகில் மிகவும் அதிர்ச்சியூட்டும் செயல்

எல்லா வகையான சூழல்களிலும் மரண தண்டனை வழங்குதலை ஏற்கவே முடியாது என்ற திருஅவையின் நிலைப்பாட்டை, திருத்தந்தை, தனது புதிய திருமடலில் ஏழு பத்திகளில் குறிப்பிட்டிருக்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனித வாழ்வு புனிதமானது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கும் திருஅவை, அதற்காக எப்போதும் தன்னை அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறது என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைப்புக்களில் பணியாற்றும், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மற்றும், ஏனைய பன்னாட்டு அமைப்புக்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், அக்டோபர் 10, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட, மரண தண்டனைக்கு எதிரான 18வது உலக நாளை முன்னிட்டு, வத்திக்கான் செய்தித்துறைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti)” என்ற புதிய திருமடல் வெளியிடப்பட்டுள்ள சூழலில், இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது குறித்து குறிப்பிட்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், மரண தண்டனை வழங்குதல், அரசுகள் மற்றும், மனித சமுதாயத்தின் கையாலாகத்தன்மையை வெளிப்படுத்துகின்றது என்று கூறினார்.

கத்தோலிக்க மறைக்கல்வி ஏட்டில், மரண தண்டனைக்கு, “அனுமதிக்கமுடியாதது” என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ம் ஆண்டில் கூறியிருந்ததைக் குறிப்பிட்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், மரண தண்டனை வழங்குதல், முற்றிலும் ஒழிக்கப்படுவதற்கு, கத்தோலிக்கர் உழைக்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

எல்லாவகையான சூழல்களிலும் மரண தண்டனை வழங்குதலை ஏற்கவே முடியாது என்ற திருஅவையின் நிலைப்பாட்டை, திருத்தந்தை, தனது புதிய திருமடலில் ஏழு பத்திகளில் குறிப்பிட்டிருப்பது பற்றியும் கருத்து தெரிவித்த பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், இந்த திருமடல் உலகளாவிய நிறுவனத்திற்கு ஓர் ஆசிர்வாதம் என்று கூறினார்.

தற்போது உலகில் 142 நாடுகள் மரண தண்டனையை இரத்து செய்துள்ளன அல்லது தற்காலிகமாகத் தடைசெய்துள்ளன. மேலும், 2019ம் ஆண்டில் 20 நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

10 October 2020, 14:56