தேடுதல்

கொன்டூராஸ் புலம்பெயர்ந்தோர் கொன்டூராஸ் புலம்பெயர்ந்தோர்  (AFP or licensors)

வறிய நாடுகளின் கடன்கள் மன்னிக்கப்படவேண்டும்

பொருளாதாரம் அல்லது, நிதி சார்ந்த விவகாரங்கள் குறித்து அமைக்கப்படும் கொள்கைகளும், தீர்மானங்களும், தனியாட்கள், குடும்பங்கள், ஏன் முழு மனித சமுதாயத்தின் வாழ்வில் நல்விளைவை உருவாக்குவதாய் இருக்கவேண்டும் - பேராயர் காச்சா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக நாடுகளின் பொருளாதார மற்றும், நிதி சார்ந்த கொள்கைகள், அனைத்து மக்களின் பொதுநலனுக்கு, உண்மையாகவேப் பணியாற்றும் நோக்கத்தைக் கொண்டிருக்கவேண்டியது மிகவும் முக்கியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் உரையாற்றினார்.

ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் கபிரியேலே காச்சா (Gabriele Caccia) அவர்கள், ஐ.நா.பொது அவையின் 75வது அமர்வில், அக்டோபர் 8, இவ்வியாழனன்று உரையாற்றியபோது, கொரோனா கொள்ளைநோயால், கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வறிய நாடுகளின் கடன்கள் இரத்து செய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடன்களைத் திருப்பிச் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்படும் பல வறிய நாடுகள், தங்களின் கல்வி, நலவாழ்வு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படவேண்டிய தேசியவளங்களை, அந்தக் கடன்களுக்கென செலவழிக்கின்றன என்று கூறிய பேராயர் காச்சா அவர்கள், கொள்ளைநோய் உருவாக்கியுள்ள பொருளாதாரத் தாக்கத்தால், இந்நாடுகள், கடுந்துன்பங்களை எதிர்கொள்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

உலகப் பொருளாதாரச் சந்தை அமைப்புகள் பற்றிய அமர்வில் உரையாற்றிய பேராயர் காச்சா அவர்கள், பொருளாதாரம் அல்லது, நிதி சார்ந்த விவகாரங்கள் குறித்து அமைக்கப்படும் கொள்கைகளும், தீர்மானங்களும், தனியாட்கள், குடும்பங்கள், ஏன் முழு மனித சமுதாயத்தின் வாழ்வில் நல்விளைவை உருவாக்குவதாய் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.   

கோவிட்-19, பொருளாதாரம்

கோவிட்-19 கொள்ளைநோய், பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை விளக்கிய பேராயர் காச்சா அவர்கள், இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு எழுவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியது இன்றியமையாதது என்றும் கூறினார்.

உலகின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அதன் முதுகெலும்பாய் இயங்கும், சிறுதொழில் முனைவோர் மற்றும், நடுத்தர வர்த்தகர்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்படவேண்டும் எனவும், சட்டத்திற்குப் புறம்பே பணம் பரிமாறப்படுவதற்கு எதிராக உலகளாவிய சமுதாயம் செயல்படவேண்டும் எனவும், பேராயர் காச்சா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட்டு, வளர்க்கப்படும் சூழலில், வெளிநாட்டுக் கடன்கள் இரத்துசெய்யப்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற தனது புதிய திருமடலில், குறிப்பிட்டிருப்பதை, பேராயர் காச்சா அவர்கள், ஐ.நா.வில் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

10 October 2020, 15:01