தேடுதல்

செய்தியாளர்களிடம் பேசும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் செய்தியாளர்களிடம் பேசும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்  

திருப்பீடம் – சீனா ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது

சீனாவில் நிலவும் மதம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கஇயலாது; கத்தோலிக்க திருஅவை மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளே அனைத்து மதங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளன - கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத்திற்கும், சீன அரசுக்கும் இடையே, 2018ம் ஆண்டு, செப்டம்பர் 22ம் தேதி கையெழுத்திடப்பட்டு, அக்டோபர் 22ம் தேதி நடைமுறைக்கு வந்த ஒப்பந்தம், இரு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவ்வேளையில், அவ்வொப்பந்தம் மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளதென திருப்பீடம், அக்டோபர் 22, இவ்வியாழனன்று அறிவித்தது.

இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள முக்கியமான அம்சமான ஆயர்களின் நியமனம் குறித்த நிலை கடந்த இரு ஆண்டுகளைப்போல் மீண்டும் தொடரும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து நுணுக்கங்களும் அனைவருக்கும் வெளிப்படையாக வழங்கப்பட இயலாது என்பதையும், தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இரு தரப்பினருக்கும் உகந்ததாக உள்ளது என்றும், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

அக்டோபர் 21, இப்புதனன்று, அந்தோனியானும் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கர்தினால் பரோலின் அவர்கள், இந்த ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள், சிறிது சிறிதாக, மக்களுக்கு தெளிவாகி வருகின்றன என்றும், இந்த நிலையே, தற்போதைக்கு சிறந்ததொரு முடிவு என்றும் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் வழியே, சீனாவில் நிலவும் மதம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கஇயலாது என்றும், கத்தோலிக்க திருஅவை மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளே அனைத்து மதங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளன என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அண்மைய நாள்களில் வத்திக்கானில் நடைபெற்றுவரும் நிதி தொடர்பான விசாரணைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கர்தினால் பரோலின் அவர்கள், இது, கடினமான, வேதனையான நேரம் என்றும், இதைக் குறித்து தாறுமாறான செய்திகள் மக்களை சென்றடைவது தன்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது என்றும் கூறினார்.

காட்டில் பல மரங்கள் வளர்வது எவ்வித ஓசையையும் எழுப்புவதில்லை, ஆனால், கீழே விழும் ஒரு மரம் பலமான ஓசையை எழுப்புகிறது என்ற பழமொழியை எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், திருஅவையில் நடைபெறும் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளைக் குறித்து கவனம் செலுத்துவது உதவியாக இருக்கும் என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

22 October 2020, 14:36