தேடுதல்

போலந்தில் இளைஞர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் போலந்தில் இளைஞர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' – இணையவழி கூட்டம்

'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' மனிதத்தன்மை கொண்டதாக, அனைத்து மக்களையும் வாழவைப்பதற்கு உதவியாக உள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தற்போது உலகில் கடைபிடிக்கப்பட்டுவரும் பொருளாதாரத்திலிருந்து, 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' மாறுபட்டது என்றும், இப்பொருளாதாரம், மனிதத்தன்மை கொண்டதாக, அனைத்து மக்களையும் வாழவைப்பதற்கு உதவியாக உள்ளது என்றும், திருப்பீட செய்தித் தொடர்பகம், செய்தியாளர்கள் கூட்டத்தில், அக்டோபர் 27 இச்செவ்வாயன்று கூறியது.

'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற தலைப்பில், இளையோரை மையப்படுத்தி, இவ்வாண்டு மார்ச் மாதம், அசிசி நகரில் நடைபெறவிருந்த நிகழ்வு, கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடியால் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது, இந்நிகழ்வு, நவம்பர் 19ம் தேதி முதல் 21ம் தேதி முடிய கணணி வழி கூட்டமாக நடைபெறும் என்று திருப்பீடத் தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் கொள்ளைநோயின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, கணணி வழியே நடைபெறவிருக்கும் இந்தக் கருத்தரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஒரு காணொளிச் செய்தி வழியே பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருங்காலப் பொருளாதாரத்தை வடிவமைப்பதற்கு, இளையோர் வழங்கும் பரிந்துரைகள், இந்தக் கூட்டத்தில் செவிமடுக்கப்படும் என்றும், வருங்காலத்தைக் குறித்து இளையோர் காணும் கனவுகளை இவ்வுலகம் கேட்பதற்கு, 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற இச்சந்திப்பு வழி வகுக்கும் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் செய்தியாளர்களிடம் கூறியது.

இந்த கணணி வழி கூட்டத்திற்கென, இவ்வாண்டு மார்ச் மாதம் முதல், 1000த்திற்கும் மேற்பட்ட இளையோர் உழைத்து வந்துள்ளனர் என்றும், அவர்கள், பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள இளையோரின் கருத்துக்களைத் திரட்டி வந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரமும் மனிதமும், வேலையும் பராமரிப்பும், வேளாண்மையும் நீதியும், எரிசக்தியும் வறுமையும், வணிகமும் அமைதியும், பொருளாதாரத்தில் பெண்கள், என்ற பல்வேறு தலைப்புக்களில் இளையோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

28 October 2020, 14:09