தேடுதல்

உரோம் நகர் யூதத் தலைமைக் குருவுடன் திருத்தந்தை உரோம் நகர் யூதத் தலைமைக் குருவுடன் திருத்தந்தை 

கிறிஸ்தவ-யூத நல்லுறவில் 55 ஆண்டுகளாக வளர்ச்சி

கிறிஸ்தவ-யூத உறவை வளர்க்கும் வகையில், திருத்தந்தையர்கள், யூத தொழுகைக்கூடங்களுக்கும், யூதர்கள் சித்ரவதை செய்யப்பட்ட வதை முகாம்களுக்கும் சென்று வந்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"நாம் வாழும் காலம்" என்று பொருள்படும் 'Nostra Aetate' என்ற திருஅவை ஏடு வெளியாகி 55 ஆண்டுகள் நிறைவுற்ற அக்டோபர் 28, இப்புதனன்று, யூதர்களுடன் நல்லுறவை வளர்க்கும் திருப்பீட ஆணையமும், பன்னாட்டு யூத ஆணையமும் வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டன.

'Nostra Aetate' திருஅவை ஏட்டில் கூறப்பட்டுள்ள கிறிஸ்தவ-யூத நல்லுறவு, கடந்த 55 ஆண்டுகளாக பல வழிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று, யூதர்களுடன் நல்லுறவை வளர்க்கும் திருப்பீட ஆணையத்தின் தலைவர், கர்தினால் பீட்டர் கோக் அவர்களும், பன்னாட்டு யூத ஆணையத்தின் தலைவர் ராபி நோவாம் மரான்ஸ் (Noam Marans) அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளனர்.

'Nostra Aetate' ஏட்டில் கூறப்பட்டுள்ள கிறிஸ்தவ-யூத உறவை வளர்க்கும் வகையில், திருத்தந்தையர்கள், யூத தொழுகைக்கூடங்களுக்கும், யூதர்கள் சித்ரவதை செய்யப்பட்ட வதை முகாம்களுக்கும் சென்று வந்திருப்பது, இவ்விரு மதங்களுக்கு இடையே நல்லுறவையும், நல்லுணர்வுகளையும் வளர்ந்த்துள்ளன என்று ராபி மரான்ஸ் அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிவரும் தலைமைப்பணியைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட ராபி மரான்ஸ் அவர்கள், யூதர்களுக்கு எதிராக கூறப்படும் கூற்றுகளையும், செயல்பாடுகளையும் திருத்தந்தை கண்டனம் செய்துள்ளது, கிறிஸ்தவ-யூத உறவுகளை இன்னும் வலுவாக்கியுள்ளது என்று கூறினார்.

29 October 2020, 14:02