தேடுதல்

கோவிட்-19: பொதுவான தீமை வழியாக, பொதுவான நன்மை

உண்மையான அரசியல் என்பது, இலாபத்தை அல்ல, மாறாக, மனித சமுதாயத்தின் நலனை முதலில் நோக்குவதாய்ச் செயல்படவேண்டும் – வத்திக்கான் குழுவில் பணியாற்றும் பொருளாதார நிபுணர் புரூனி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்திற்குப்பின், ஒருமைப்பாடு என்ற கண்ணாடிவில்லைகள் வழியாக, மனித ஒன்றிணைந்த வாழ்வு பற்றி மீண்டும் சிந்திக்கவேண்டும் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை கூறியது.

தற்போதைய கொள்ளைநோய் முடிவுற்றபின், உலகத்தில் உடன்பிறந்த உணர்வில் புதிய சூழலை உருவாக்குவதற்காக, "கோவிட்-19 : நலமான வருங்காலத்தைக் கட்டியெழுப்ப" என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் ஒத்துழைப்புடன், நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற, பொருளாதார நிபுணர் Luigino Bruni அவர்கள், வத்திக்கான் செய்தித் துறையிடம், தன் பணி பற்றி விளக்கியுள்ளார்.

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்திற்குப்பின், வருங்காலத்தை அமைப்பது குறித்த வழிமுறைகளை ஆய்வுசெய்யும் வத்திக்கான் குழுவில் செயல்படும் புரூனி அவர்கள், நலவாழ்வு, கல்வி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஆதாயத்தைக் கருத்தில்கொண்டு எந்த ஒரு நாடும் செயல்படக் கூடாது என்று வலியுறுத்தினார்.

கோவிட்-19 கொள்ளைநோய் நல்லதொரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது என்றும், பொதுவான நன்மையோடு தொடர்புள்ள ஆழமான உண்மையை நாம் கண்டுணரவேண்டும் என்றும் கூறிய புரூனி அவர்கள், உண்மையான அரசியல் என்பது, இலாபத்தை அல்ல, மாறாக, மனித சமுதாயத்தின் நலனை முதலில் நோக்குவதாய்ச் செயல்படவேண்டும் என்று கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்திற்குப்பின் நல்லதோர் உலகை உருவாக்க, மனிதரின் ஒத்துழைப்பும், உலகளாவிய ஒருமைப்பாடும் அவசியம் என்பதை வலியுறுத்திய புரூனி அவர்கள், உலகத்தில், பல்லாயிரக்கணக்கான சிறார் கல்விபெற வாய்ப்பின்றி உள்ளனர், எனவே வருங்காலத்தில் கல்வியில் அதிக அக்கறை காட்டப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

31 October 2020, 13:43